பாப்பாரப்பட்டி ஏரியில் சீமை கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்

தர்மபுரி, மார்ச் 16:  பாப்பாரப்பட்டி ஏரியில் ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் ராமாக்காள், செட்டிக்கரை, ரெட்ரி ஏரி, நார்த்தம்பட்டி, இலளிகம், பாப்பாரப்பட்டி, பைசுஅள்ளி, சோகத்தூர் உள்பட 73 ஏரிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் 634 ஏரி, குளங்களும் உள்ளன. பாப்பாரப்பட்டி டவுனை ஒட்டியபடி ஏரி 44 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. மலையூர், பிக்கிலி, பனைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும் சமயங்களில் இந்த ஏரிக்கு தண்ணீர் பெருக்கெடுத்து வரும். தற்போது, பஞ்சப்பள்ளி கால்வாய் நீட்டிப்பு திட்டத்தில் பாப்பாரப்பட்டி ஏரி இணைக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பின் காரணமாக, கால்வாய் முழுவதும் தூர்ந்து போய்விட்டது. இதனால், பாப்பாரப்பட்டி ஏரிக்கு கடந்த சில ஆண்டுகளாக நீர்வரத்தின்றி சீமை கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் ஏரியில் கலந்து வருகிறது. பல ஆண்டுகளாக பாப்பாரப்பட்டி ஏரியில் தூர்வாரவில்லை. எனவே, உடனடியாக பாப்பாரப்பட்டி ஏரியில் சீமை கருவேல மரங்களை அகற்றி, நீராதாரத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: