பிரேத பரிசோதனை, தடய மாதிரி பாதுகாப்பு தொடர்பாக நிலையான இயக்கமுறை வகுக்க கோரி பொதுநல வழக்கு: தமிழக அரசு பதில் தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மருத்துவமனைகளில் நடைபெறும் பிரேத பரிசோதனை, தடய மாதிரிகளை சேகரித்து பாதுகாத்தல், அனாதை மற்றும் அடையாளமா காணப்படாத உடல்களை கையாளுதல் உள்ளிட்ட செயல்பாடுகளை மேற்கொள்வதில் நிலையான வழிகாட்டு முறைகளை (நிலையான இயக்கமுறை) வகுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எம்.அருண் சுவாமிநாதன் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் பல நேரங்களில் தவறு ஏற்படுகிறது. தவறான உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இதனால், யாரோ ஒருவரின் உடலை அடக்கம் செய்யும் நிலை ஏற்படுகிறது.

இது போன்ற தவறுகளால் சில நேரங்களில் இறந்துபோனதாக கருதப்படும் நபர் உயிருடன் இருப்பதும் நடந்துள்ளது.  அதுமட்டுமல்லாமல் பிரேத பரிசோதனையின்போது சேகரிக்கப்படும் தடயங்களை பாதுகாப்பதிலும் சரியான வழிமுறைகள் இல்லை. பல அரசு மருத்துவமனைகளில் தடயங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டாலும் அவை நீண்ட காலமாக தடய அறிவியல் சோதனைக்கு கொண்டு செல்லப்படுவதில்லை.

இதனால், தடயங்கள் சேகரிக்கப்படுவதன் நோக்கமே வீணாகிவிடுகிறது. குற்ற வழக்குகளில் இந்த தாமதத்தால் பல சட்ட சிக்கல்கள் ஏற்பட்டுவிடும். மேலும், அடையாளம் காணப்படாத உடல்கள், ஒருவரும் உரிமை கோராத உடல்கள் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் வைக்கப்படுகின்றன. இதுபோன்ற பல உடல்கள் பல ஆண்டுகளாக பிணவறைகளில் உள்ளன. இந்த உடல்களை அடக்கம் செய்ய எந்த நடைமுறையும் இல்லை.

எனவே, பிரேத பரிசோதனை, தடயங்கள் சேகரித்து பாதுகாத்தல், அடையாளம் காணப்படாத, யாரும் கோராத உடல்கள் ஆகியவற்றை கையாள்வது தொடர்பாக நிலையான இயக்க முறைகளை வகுக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதில் தருமாறு தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: