தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நிரப்ப உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியை நியமிக்க கோரி வழக்கு: ஒன்றிய, மாநில அரசுகள், யுஜிசி பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழக பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணை வேந்தர்கள் பதவிகளை நிரப்ப உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையில் உயர் அதிகார குழுவை நியமிக்க கோரிய மனுவிற்கு பதிலளிக்குமாறு ஒன்றிய, மாநில அரசுகளுக்கும் பல்கலைக்கழக மானிய குழுவிற்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 20 அரசு பல்கலைக்கழகங்களில் 15 பல்கலைக்கழகம் துணை வேந்தர்கள் பதவிகள் காலியாக உள்ளதாக கூறி செங்கல்பட்டை சேர்ந்த கேபிள் டிவி ஆப்ரேட்டர் பாஸ்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ஐந்து பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் பதவிகள் இந்த ஆண்டின் இறுதியுடன் காலியாக உள்ளது. முந்தைய ஆட்சி காலத்தில் அரசியல் சாசன அதிகார அமைப்பிற்கும், அரசுக்கும் இடையிலான மோதல் போக்கு காரணமாக துணை வேந்தர்கள் பதவிகள் நிரப்பப்படாமல் இருந்தது. துணை வேந்தர்கள் பதவிகள் காலியாக உள்ளதால் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்திலும் இதே போன்ற ஒரு நிலை நிலவிய போது உச்சநீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி யு.யு.லலித் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதேபோல் தமிழகத்தில் காலியாக உள்ள துணை வேந்தர்கள் பதவிகளை நிரப்புவதற்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் பல்கலைகழக மானிய குழு பிரதிநிதியை சேர்த்து உயர் அதிகாரம் குழுவை அமைக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, வழக்கறிஞர் பி.ஜெகநாத் ஆஜராகி வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவிற்கு பதிலளிக்குமாறு ஒன்றிய, மாநில அரசுகளுக்கும், பல்கலைக்கழக மானிய குழுவிற்கும் உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: