சென்னை: சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் 4 தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்த அனுமதி கோரி தனியார் மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாடு அரசை அணுகின. தாமதமாக என்ஓசியை மறுத்த காரணத்தினால் அவர்கள் உயர் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றனர்.
பெரம்பலூரை சேர்ந்த 2 தனியார் மருத்துவ கல்லூரிகள் தமிழக அரசை அணுகாமலேயே நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் ஆகியுள்ளன. நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல் மாணவர் சேர்க்கை நடத்த முடியும். தனியார் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றால், இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீடும் பின்பற்றப்படாது. இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறோம்.
இது குறித்து ஒன்றிய அரசிடமும் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். இதற்கு நிரந்தர தீர்வு கல்வி, மருத்துவத்தை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதே. கடந்த திமுக ஆட்சியில் தனியார் கல்லூரிகளுக்கு விதிகளை மீறி தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது நாம், 461 இடங்களை ஒதுக்கும் நிலை உருவாகியுள்ளது. இதுபோல மாநில அரசு அனுமதியின்றி அந்தஸ்து கிடைத்தால் தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
