விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளை கழற்றி விட பிளான் தவெக உடன் பாமக ரகசிய பேச்சு: சவுமியாவுக்கு அமைச்சர் பதவி தருவதாக உறுதி

சென்னை: தவெகவுக்கு ஆதரவு தந்த கட்சிகளை கழற்றிவிட்டு விட்டு புதிய கூட்டணியை ஏற்படுத்தும் வகையில் தவெக உடன் பாமக ரகசிய பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை சவுமியாவுக்கு அமைச்சர் பதவி என்ற அளவில் தொடங்கியிருப்பதாக கூறப்படும் தகவல் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப் பேரவை தேர்தல் நடந்து முடிந்து தவெக ஆட்சியை பிடித்துள்ளது. 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால் ஆட்சி அமைப்பதற்கான மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

இதனால் திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவுடன், ஒரு வழியாக முதல்வராக விஜய் பதவியேற்றார். இதில், கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் அமைச்சர் பதவி வேண்டாம், ஆதரவு மட்டுமே என்ற நிலைபாட்டை எடுத்தனர். மற்ற கட்சிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 5 எம்எல்ஏக்களை கொண்ட காங்கிரஸ் முதல் ஆளாக சென்று தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற கட்சிகளிடம் ஒன்று, இரண்டு எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். அதிமுக 47 எம்எல்ஏக்களை வைத்திருந்தாலும் அவர்களிடம் தவெக ஆதரவு கேட்கவில்லை. அதற்கு பதிலாக அந்த கட்சியை உடைத்து எம்எல்ஏக்களை இழுக்க தவெக திட்டமிட்டது. இதற்கிடையே அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமகவுக்கு சவுமியாவுடன் சேர்த்து 4 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆனால் அந்த கட்சியிடம் தவெக ஆதரவு கேட்காதது அப்போதே பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஆதரவு கட்சிகளுடன் மைனாரிட்டி அரசை நடத்தி வரும் தவெக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் தான், அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலில் வெற்றி பெறச் செய்து தனி மெஜாரிட்டியை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதை தான் குதிரை பேர தவெக அரசு என்று எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

கம்யூனிஸ்ட்கள் ஆதரவு மட்டுமே என்று தெரிவித்துள்ள நிலையில், விசிகவும் திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்று திருமாவளவன் கூறியிருப்பதும் தவெகவுக்கு புளியை கரைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தனி மெஜாரிட்டி அரசாக கொண்டு வருவதற்கான முயற்சிகளை தவெக தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தவெக அரசில் முதல் ஆளாக சென்று துண்டு போட்டு இடம் பிடித்த காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்கள் அடுத்தடுத்த தேர்தலை தவெக உடன் சந்தித்து கட்சியை வளர்க்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர்.

இதனால் தவெக விட்டு அவர்கள் வெளியேற வாய்ப்பில்லை. ஆனால் மற்ற கட்சிகளை நம்ப முடியாது என்பதால் அவர்களை நம்புவதற்கு தவெகவும் தயாராக இல்லை என்றே அரசியல் விமர்ச்சகர்கள் கருதுகின்றனர். இதனால் திருச்சி கிழக்கு தொகுதி உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த 6 தொகுதிகள் என மொத்தம் 7 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தவெகவிடம் 107 எம்எல்ஏக்கள் உள்ளனர். மெஜாரிட்டி ஆட்சிக்கு இன்னும் 11 எம்எல்ஏக்கள் தேவைப்படுகின்றனர்.

இதற்கிடையே, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைபாட்டில் வேறுபாடு காணப்படுவதால் ஆட்சியை காப்பாற்றுவதற்கான நடவடிக்கையில் தவெக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இடைத்தேர்தல் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்று வர இன்னும் சில மாதங்கள் என்பதால் அதற்குள் தங்களுக்கான மெஜாரிட்டியை காட்ட வேண்டிய கட்டாயத்தில் தவெக உள்ளது. இதனால் 4 எம்எல்ஏக்கள் கொண்ட பாமக உடன் ரகசிய பேச்சுவார்த்தையை தவெக தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சு எழுந்துள்ளது.

இதற்காக அன்புமணியுடன் தவெகவின் முக்கிய நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சவுமியாவுக்கு அமைச்சர் பதவி என்ற வகையில் இந்த பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக அரசியல் களத்தில் பேசப்படுகிறது. தவெக கூட்டணியில் பாமக சேர்ந்தால் கூடுதலாக 4 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைக்கும். தவெக, காங்கிரஸ், பாமக என எம்எல்ஏக்களை கணக்கிட்டு பார்த்தால் மொத்தம் 116 எம்எல்ஏக்கள் இருப்பார்கள்.

தற்போது திருச்சி கிழக்கு தொகுதியுடன் சேர்த்து 7 தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்டு விட்டதால் மெஜாரிட்டிக்கு 114 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தால் போதுமானது. மேலும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் கூடுதல் எம்எல்ஏக்கள் கிடைப்பார்கள். இதனால் திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவு என்பது தவெகவுக்கு தேவை இருக்காது. இதை கணக்கிட்டுத் தான் பாமக உடன் தவெக தற்போது ரகசிய பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக அரசியல் விமர்ச்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: