திருச்சி: மேகதாது அணை மற்றும் பயிர்கடன் தள்ளுபடி விவகாரத்தில் ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து காவிரி மணலில் புதைந்தும், கழுத்தில் தூக்கு கயிறு மாட்டியும் விவசாயிகள் நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு பாரபட்சமாக செயல்படுவதாகவும், கர்நாடகாவின் திட்டத்திற்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதை மாநில அரசு கண்டிக்காததை கண்டித்தும், மேகதாது அணை திட்டத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் இறங்கி மணலில் புதைந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் ஒன்றிய அரசை கண்டித்தும், கர்நாடக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். மேகதாது திட்டத்தை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்தாவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் எனவும் கடும் எச்சரிக்கை விடுத்தனர். இதேபோல், தமிழக முதல்வர் விஜய், சட்டமன்ற தேர்தலின் போது விவசாயிகளுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிபடி 5 ஏக்கர் சிறு, குறு விவசாயிகளுக்கு பயிர் கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
திருவிடைமருதூர் வட்டத்தில் மும்முனை மின்சாரம் தொடர்ந்து தடையில்லாமல் வழங்க வேண்டும், உரம் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா அலுவலகத்தை தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் சுகுமாறன் தலைமையிலான விவசாயிகள் நேற்று திருவிடைமருதூர் காந்திசிலையில் இருந்து கழுத்தில் தூக்கு கயிறு மாட்டிக்கொண்டு ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது அரசுக்கு எதிரான கண்டனம் கோஷங்கள் எழுப்பியபடி சென்ற விவசாயிகள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
* அமராவதியில் இறங்கி திடீர் போராட்டம்: தேசிய நெடுஞ்சாலையில் படுத்து மறியல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அமராவதி ஆற்று வழியாக பழைய ஆயக்கட்டுக்கும், பிரதான கால்வாய் வழியாக புதிய ஆயக்கட்டுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை மற்றும் கோடை மழை போதிய அளவில் பெய்யாததால் மடத்துக்குளம் மற்றும் தாராபுரம் அதைச் சுற்றி உள்ள கிராமப்பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது.
இதனால், விவசாயிகள் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கரையோர கிராமப் புறங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை கடத்தூர் ராஜவாய்க்கால் வழியாக முறைகேடாக எடுத்து சென்று தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால், விவசாயிகள் நேற்று காலை அங்கு சென்று பார்த்தனர். அப்போது, உரிய அனுமதி இல்லாமல் முறைகேடாக ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால், ஆவேசமடைந்த விவசாயிகள் கடத்தூர் ராஜவாய்க்கால் தண்ணீருக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பிய விவசாயிகள், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை.
இதனால் அங்கிருந்து கிளம்பி மடத்துக்குளம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு தேசிய நெடுஞ்சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
