முதல்வர் உரையில் பஞ்ச் டயலாக் மட்டும் தான் இருந்தது செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை தமிழகத்துக்கே தெரியும்: முதல்வரின் குட்டி கதைக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி

சென்னை: முதல்வர் உரையில் பஞ்ச் டயலாக் மட்டும் தான் இருந்தது என்றும், செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை தமிழகத்துக்கே தெரியும் என்றும் முதல்வரின் குட்டிக் கதைக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில் இன்னும் சட்டம் ஒழுங்கை கூட சரி செய்யவில்லை என்ற விமர்சனம் சமூக வலைதளங்களில் தெறிக்க தொடங்கியுள்ளது. ரீல்ஸ் ஆட்சியை விடுத்து ரியல் ஆட்சியை நடத்துங்கள் என்று எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில், தமிழக சட்டப் பேரவை கூட்டத்தில் கவர்னர் உரை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. கவர்னர் உரை மீதான விவாதங்களுக்கு முதல்வர் விஜய் பதிலளித்து பேசினார். அப்போது பேரவையில், முதல்வர் விஜய் சொன்ன குட்டிக்கதை சோசியல் மீடியாவில் டிரெண்டாகி கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது. விஜய் பேசுகையில், ‘‘ஒரு ஊரில் ஒரு பெரியவர்.. வெயில் அதிகமாக இருக்கிறது என்று கண்ணுக்கு மேல் கை வைத்துக்கொண்டு சுத்தி சுத்தி தேடிக் கொண்டிருந்தாராம்..

அப்போது கூட நின்ற சின்னப் பையன் என்ன தேடிட்டு இருந்தீங்க என்று கேட்டானாம்.. அதற்கு அவர், ஒன்னுமில்லைடா தம்பி.. உங்க அப்பா இங்கதான் இருப்பாருனு சொன்னாங்க.. எங்க உங்க அப்பாவையே காணோம்.. என்றாராம்.. எங்களுக்கும் நக்கலாக, நையாண்டியாக பேச தெரியும்.. யாரும் டென்ஷனாக வேண்டாம்..’’ என்று பேசி இருந்தார். விஜய்யின் இந்த பேச்சு முதிர்ச்சி இன்றி இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. அதேபோல் தமிழ்நாட்டிற்கு என்று ஒரு மாண்பு இருக்கிறது.

தேர்தல் தோல்வியை வைத்து எந்த அரசியல்வாதியையும் மக்கள் எடை போடவோ, கிண்டல் செய்யவோ மாட்டார்கள். தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த காமராஜர், பேரரறிஞர் அண்ணா, ஜெயலலிதா, ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் தான். இதனால் அரசியல்வாதிகள் மத்தியில் தோல்வி என்றும் பெரிதாக பேசப்படவோ, கிண்டலுக்கோ ஆளாகாது. ஏனென்றால் தமிழக அரசியல்வாதிகளால் தோல்வியையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருந்தது.

ஆனால் முதல்வர் விஜய் சட்டசபையில் வைத்தே மு.க.ஸ்டாலினின் தோல்வியை கிண்டல் செய்ததோடு, பினிஷ்டு என்று சைகை செய்திருப்பது அவரது பதவிக்கு அழகல்ல என்று அரசியல் விமர்சகர்கள் விவாதங்களை அனல் பறக்க தொடங்கியுள்ளனர். கட்சி நிகழ்ச்சியில் பேசுவதை போல் அல்லாமல், இனியாவது சட்டசபை மாண்புக்கு ஏற்றபடி விஜய்யின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று சோசியல் மீடியாவில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், கவர்னர் உரைக்கு பதிலாக, திமுக மீது திட்டமிட்ட குற்றச்சாட்டுகளையும் அரசியல் விமர்சனங்களையும் மட்டுமே அவர் முன்வைத்ததாக எதிர்க்கட்சித் தரப்பினர் குற்றம்சாட்டினர். இந்த நிலையில், முதல்வர் விஜய்யின் பேச்சை கடுமையாக விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதல்வர். பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத் தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.

முதல்வரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும், பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர, மின்வெட்டு, விவசாயிகள் பிரச்னை, மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை. எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.

குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும். ஆகவே, நடிகர் விஜய் என்பதை மறந்து, இனியாவது முதல்வர் விஜய்யாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: