வாணியம்பாடி: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நேற்று முன்தினம் அவையில் வாணியம்பாடி எம்எல்ஏ சையத் பாரூக் பாஷா, தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் முதல்வர் விஜய்யை ‘கடவுளுக்கு கடவுளாக’ என குறிப்பிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி பல்வேறு தரப்பினர் கண்டனங்களையும், கடுமையான விமர்சனங்களையும் பதிவு செய்ய தொடங்கினர்.
இதைத்தொடர்ந்து வாணியம்பாடி எம்எல்ஏ சையத் பாரூக் பாஷா மன்னிப்பு கேட்டு நேற்று சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ‘சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு முதல்வருக்கு நான் பிறந்தநாள் வாழ்த்து சொல்லும்போது, நான் இறைவனுக்கு கண்மணியாய் வாழ வேண்டும் என சொல்ல வேண்டிய வார்த்தை, தவறுதலாக கடவுளுக்கும் கடவுளாய் என்று தவறான வார்த்தை வெளிவந்துவிட்டது.
இதற்காக நான் எல்லோருக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். நான் காயிதே மில்லத் வழியில் வந்தவன். மார்க்க வழியில் எப்போதும் நான் உறுதியாக இருக்க கூடியவன். எல்லோருக்கும் புரியும்படி பேசுவதற்கு நான் முயற்சி செய்தேன். அதற்காக கடவுளுக்கும் கடவுள் என்று சொல்லிவிட்டேன். அதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அந்த தவறை நான் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
