கத்தார் தொழிற்சாலை கோர விபத்து நெல்லையை சேர்ந்த 3 பேர் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமங்கள்

நெல்லை: கத்தார் நாட்டில் உள்ள தொழிற்சாலையில் நடந்த பயங்கர தீவிபத்தில் 13 தொழிலாளர்கள் பலியாகினர். இதில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவை சேர்ந்த 3 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டின் ராஸ் லப்பான் நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில் கடந்த 21ம் தேதி இரவு தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

இந்த கோர விபத்தில் ஆலை வளாகத்தில் பணியில் இருந்த 13 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலியானவர்களில் 12 பேர் இந்தியர்கள் என்றும், ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்றும் கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இவ்விபத்தில் 66 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த விபத்தில் பலியான 13 பேரில் 3 பேர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா பழவூரைச் சேர்ந்த தங்கராஜ் மகன் பவித் (26) என்பவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கத்தாருக்கு வேலைக்கு சென்றுள்ளார். அவ்வப்போது குடும்பத்தினருடன் பேசி வந்த அவர், நேற்றுமுன்தினம் பர்சான் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார். ராதாபுரம் தாலுகா பணகுடி சிவகாமிபுரத்தைச் சேர்ந்த சஜித்குமார் (24), பணகுடி அழகிய நம்பிபுரத்தைச் சேர்ந்த சுபின் (25) ஆகியோரும் பலியாயினர்.

இதில் சஜித்குமார் வீட்டிற்கு ஒரே ஒரு மகன் ஆவார். இப்பகுதியை சேர்ந்த ஏராளமான நபர்கள் அரபு நாடுகளில் பணியாற்றி வரும் நிலையில், இந்த சம்பவம் அவர்களது சொந்த கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்த வாலிபர்களை உடல்களைத் தாய்நாட்டிற்கு கொண்டு வர இந்தியத் தூதரகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Related Stories: