மதுரை: அசல் பத்திரம் இல்லாதபோது, ஆவணப்பதிவுகளை செய்ய இயலாத வகையில் உள்ள 34 சி என்ற பத்திர பதிவு சட்டத்தை ரத்து செய்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. அகில இந்திய ரியல் எஸ்டேட் சங்க கூட்டமைப்பு உள்ளிட்ட சிலர், ஐகோர்ட் மதுரை கிளையில் தனித்தனியாக தாக்கல் செய்த மனு: தமிழ்நாட்டில் பத்திரப்பதிவின்போது சம்பந்தப்பட்ட சொத்துகளின் அசல் ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியம் என்று சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இதன்படி பதிவாளர் அலுவலகங்களில் சொத்துகளை பதிவு செய்பவர்கள் அசல் ஆவணங்களை கையில் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சட்டத்திருத்தத்தை செல்லாது என்று அறிவித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தனர். இந்த மனுக்களை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது அரசு வக்கீல்கள் ஆஜராகி, சொத்து உரிமைகளை பாதுகாப்பதற்கும், மோசடிகளை தடுப்பதற்கும் தனக்கு உள்ள அரசியலமைப்பு கடமையை நிறைவேற்றும் வகையில் பதிவுச்சட்டத்தில் 34 (சி) பிரிவை சேர்த்து திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் போலி விற்பனைப் பத்திரங்கள் பதிவு, ஒரே சொத்தை பலமுறை விற்பனை செய்தல், போலியாகத் தயாரிக்கப்பட்ட மூல ஆவணங்களைப் பயன்படுத்துதல், அடமான விபரங்களை மறைத்தல் போன்றவை தடுக்கப்பட்டு உள்ளன என கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தமிழ்நாடு பதிவுச் சட்டத்திருத்தத்தின் பிரிவு 34 (சி) ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட முந்தைய விதி 55-ஏயை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியை தவிர வேறில்லை. பதிவுச் சட்டத்தின் 34-சி பிரிவு என்பது, சம்பந்தப்பட்ட சொத்து பூர்வீகச் சொத்தாக இருந்து, அதன் அசல் ஆவணம் கிடைக்காதபட்சத்தில், வருவாய்த்துறையினால் வழங்கப்பட்ட பட்டாவை சமர்ப்பிக்காத வரை, அந்தப் பத்திரத்தைப் பதிவு செய்ய, மறுக்க துணைப்பதிவாளருக்கு அதிகாரம் அளிக்கிறது.
இதனை நுணுக்கமாக ஆராயும்போது, ஒரு சொத்து பூர்வீகச் சொத்தா? இல்லையா? என்பது போன்ற உரிமையியல் சார்ந்த கேள்விகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தையும் இது துணைப் பதிவாளருக்கு வழங்குகிறது. ஒரு சொத்து பூர்வீக சொத்தா அல்லது கூட்டுக் குடும்ப சொத்தா என்பது உண்மைகளின் அடிப்படையில் முடிவு செய்யப்பட வேண்டிய ஒரு விஷயமாகும்.
இதுவரை வெறும் நிர்வாகப் பணிகளை மட்டும் கவனித்து வந்த துணைப் பதிவாளர், இப்போது சொத்தின் தன்மையைத் தீர்மானிக்கும் மற்றும் பாதுகாக்கும் அதிகாரத்தை எவ்வாறு கையிலெடுக்க முடியும்? எனவே, சொத்துரிமை தொடர்பான கேள்விகளைத் தீர்மானிக்க துணைப் பதிவாளருக்கு அதிகாரமளிக்கும் இந்த பிரிவு, இந்திய அரசியலமைப்பின் அடிப்படை அமைப்பிற்கும் அதிகாரப் பகிர்வு கோட்பாட்டிற்கும் எதிரானதாகும்.
மேலும் அரசியலமைப்பின் 300-ஏ பிரிவின் கீழ் ஒருவரின் சொத்துரிமைக்கு தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற கட்டுப்பாடுகளை இந்த சட்டத்திருத்தம் விதிக்கிறது. இது, சொத்து மாற்றச் சட்டம்’ மற்றும் ‘ஒப்பந்தச் சட்டம்’ போன்ற முக்கிய சட்டங்களின் விதிகளையும் மீறுவதுடன், அதிகாரப் பகிர்வு கோட்பாட்டை மீறுவதாகவும், தன்னிச்சையானதாகவும் உள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு பதிவுச்சட்டத்தின் 34 சி பிரிவை சேர்த்து பிறப்பித்த சட்டத்திருத்தம் ரத்து செய்யப்படுகிறது. எனவே, அசல் ஆவணங்களின்றியும் பத்திரப்பதிவு செய்யலாம். இவ்வாறு உத்தரவிட்டனர்.
