ஆபாச பாடலுக்கு குத்தாட்டத்தை தொடர்ந்து அடுத்த சர்ச்சை: சிறுமிகளின் கால்களை அமுக்கிய கல்வி அமைச்சருக்கு கடும் எதிர்ப்பு: பொதுமக்கள், பெண்கள் அமைப்பினர் கண்டனம்

மேலூர்: ஆபாச பாடலுக்கு தவெக பெண் நிர்வாகியுடன் குத்தாட்டம் ஆடியதை தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் மீது அடுத்து சர்ச்சை பாய்ந்துள்ளது. பள்ளி சிறுமிகளின் கால்களை அமுக்கி விட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மதுரை மாவட்டம், மேலூரில் முதல்வர் விஜய் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிறந்ததினத்தை கொண்டாடும் வகையில் ‘போதையில்லா தமிழகம் மற்றும் பெண்கள் விழிப்புணர்வு’ மினி மாரத்தான் போட்டி கடந்த 21ம் தேதி நடந்தது. இதற்கான துவக்க விழா மேலூர் அரசு இருபாலர் பள்ளி வளாகத்தில் நடந்தது.

இவ்விழாவில் பங்கேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பேன்ட், டிசர்ட் அணிந்து, தவெக மேலூர் நகர் இணைச் செயலாளரான சுபாஷினியுடன் இணைந்து, ‘தளபதி கச்சேரி’ என்ற பாடலுக்கும், முதல்வர் விஜய் நடித்த படத்தில் இடம் பெற்ற ஆபாச அர்த்தங்கள் கொண்ட ‘வாடி வாடி வாடி கைப்படாத சிடி’ என்ற பாடலுக்கும் குத்தாட்டம் ஆடினார். அரசுப்பள்ளி வளாகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர், பெண்ணுடன் மேடையில் ஆபாச பாடலுக்கு குத்தாட்டம் போட்டதற்கு பொதுமக்கள், பெற்றோர், கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், அன்றைய தினம் பள்ளியில் துவங்கிய மாரத்தான் போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவிகள், ஓடி வந்த களைப்பில் மேடையில் காலை நீட்டி அமர்ந்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அமைச்சர் விஸ்வநாதன், ஒவ்வொரு சிறுமிகளின் கால்களையும் அமுக்கி விட்டு, விரல்களை சுளுக்கு எடுத்தார். இது அங்கிருந்ேதாரை முகம் சுளிக்க வைத்தது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போது பள்ளிகளில் மாணவ, மாணவிகளிடம் குட் டச், பேட் டச் பற்றி சொல்லித் தரப்படுகிறது. குறிப்பாக, மாணவிகளை அனுமதியின்றி வெளி ஆண்கள் தொட அனுமதிக்கக்கூடாது என்பது பற்றி சொல்லித் தருகின்றனர். இந்த சூழலில் உயர்கல்வித்துறை பொறுப்பு வகிக்கும் ஒரு அமைச்சர், எப்படி சிறுமிகளின் கால்களை பொது இடத்தில் தொடலாம்?

இது தவறில்லையா? அரசு பள்ளிக்கூடத்தில் பெண்ணுடன் குத்தாட்டம் போட்டது இல்லாமல், சிறுமிகள் உள்ளிட்ட பெண் சமுதாயத்திடம் எப்படி நடக்க வேண்டுமென்ற எண்ணம் இல்லாமல் இருப்பதா என பெற்றோர்கள், பொதுமக்கள், பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இவர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: