தர்மபுரி: தர்மபுரி அருகே சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று தண்ணீர் தொட்டியில் வீசிய வழக்கில் வாலிபருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. தர்மபுரியை சேர்ந்த 2ம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுவன் கடந்த 16.7.2023 அன்று வீட்டின் அருகே உள்ள தொடக்கப்பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். இரவாகியும் சிறுவன் வீட்டிற்கு வராததால், அவனது பெற்றோர் கிருஷ்ணாபுரம் போலீசில் புகாரளித்தனர்.
அந்த புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பொதுமக்கள் உதவியுடன் சிறுவனை தேடி வந்தனர். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ் மகன் பிரகாஷ் (22) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்ததில், சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று அதே பகுதியில் பயன்பாட்டில் இல்லாத மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் உடலை வீசியதாக தெரிவித்தார்.
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சிறுவனின் சடலத்தை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து, பிரகாஷை போலீசார் கைது செய்தனர். 9ம் வகுப்பு முடித்த பிரகாஷ் அதே பகுதியில் உள்ள பீரோ பட்டறையில் பணியாற்றி வந்தார். அவர் மீதான வழக்கு தர்மபுரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில், சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது உறுதி செய்யப்பட்டதால், நேற்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி அசின் பானு தண்டனை அறிவித்தார். அதன்படி, சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக பிரகாசுக்கு தூக்கு தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், சிறுவனை கொலை செய்த குற்றத்திற்காக மற்றொரு தூக்கு தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இந்த அபராத தொகையை கட்ட தவறினால் தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், இந்த வழக்கில் கடத்தல் மற்றும் தடயங்கள் அழித்த குற்றத்திற்காக, தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதற்கான அபராத தொகையை கட்ட தவறினால் தலா ஓராண்டு காலம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பால் தர்மபுரி நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
