மதுரை: நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணிகளுக்கு பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை நீதிபதி கூறியுள்ளார். திருச்சியை சேர்ந்த அம்பிகா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் திருச்சி மாவட்டம் அழகரை கால்நடை மருத்துவமனையில் கடந்த 2016ம் ஆண்டு முதல் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறேன். என்னை பணி நிரந்தரம் செய்ய வட்டார வளர்ச்சி அலுவலர் பரிந்துரை செய்தபோதிலும் அரசு அதனை பரிசீலிக்கவில்லை.
இதனால், மருத்துவமனையில் உள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட காலிப்பணியிடத்தில் என்னை நிரந்தரமாக நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், மனுதாரர் நிரந்தர பணியாளராக நியமிக்கப்படவில்லை, அவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தற்காலிக அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு ஊதியம் பெற்றவர். எனவே, அவருக்கு பணி நிரந்தரம் கோர உரிமையில்லை என கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: அரசுப் பணியிடங்களுக்கான நியமனங்கள் சட்டப்படி உரிய ஆட்சேர்ப்பு நடைமுறைகள் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். நீண்ட காலம் பணி புரிந்ததன் அடிப்படையில் மட்டும் நிரந்தர நியமன உரிமை உருவாகாது. எனவே மனுதாரரின் பணி நிரந்தர கோரிக்கையை ஏற்க முடியாது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள், கிராமப்புற கால்நடை மருத்துவமனைகளில் அன்றாடத் தேவைக்கான பணிகளை பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார்கள் என்றால், அங்கு உண்மையிலேயே நிரந்தர தொழிலாளர் தேவை இருப்பதை அது காட்டுவதாக நீதிமன்றம் கருதுகிறது.
2006ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் அப்போது குளங்கள் தூர்வாருதல், கால்வாய் தோண்டுதல், புதர்கள் அகற்றுதல் போன்ற கையால் செய்யப்படும் பணிகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் பல பணிகளை இயந்திரங்கள் மூலம் குறுகிய நேரத்தில் திறம்பட மேற்கொள்ள முடிகிறது. எனவே, இயந்திரங்கள் மூலம் செய்யக்கூடிய பணிகளில் தொடர்ந்து மனித உழைப்பை பயன்படுத்துவதற்குப் பதிலாக, வேளாண் துறையில் நிலவி வரும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க இந்தத் திட்டத் தொழிலாளர்களை பயன்படுத்த முடியுமா என்பதை அரசு பரிசீலிக்க வேண்டும்.
விவசாயிகள் எதிர்கொள்ளும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கவும், தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யவும், அரசு மற்றும் விவசாயிகள் இணைந்து ஊதியச் சுமையை பகிர்ந்து கொள்ளும் வகையிலும் கிராமப்புற பொருளாதாரத்தின் நலனை கருத்தில் கொண்டும் கொள்கை முடிவுகளை அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
