விவசாயிகள் போராட்டத்தை எதிர்க்கட்சியினர் தூண்டிவிடுகிறார்கள்: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் குற்றச்சாட்டு

சென்னை: விவசாயிகள் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தூண்டி விடுகிறார்கள் என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் குற்றம் சாட்டினார். சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச்சுக்கு பதில் அளித்து முதல்வர் விஜய் பேசியதாவது: 17வது சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

இந்த பேரவையில் 12 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கருத்தால் வேறுபட்டாலும் மக்கள் பிரச்னைக்காக ஒன்று பட்டு செயல்பட்டால் தமிழகம் முதல் மாநிலமாக விளங்கும். எதிர்த்து பேசினால் தான் எதிர்க்கட்சி தலைவர் என்று தெரியும் என பேசிய எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி. நான் முதல்வர் பதவிக்கு வந்ததற்கு தமிழ்நாடு மக்கள் தான் காரணம். 2024ம் ஆண்டு தவெக கட்சி ஆரம்பித்தோம். கூட்டணி இல்லாமல் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தனியாக நின்று தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது.

35 சதவீத வாக்குகள் பெற்று ஆளும் கட்சியாக அமர்ந்துள்ளோம். இந்த இரண்டரை ஆண்டுகள் எவ்வளவு வலிகளையும், பிரச்னைகளையும் சந்தித்தோம். குறிப்பாக, கரூரில் 41 உயிர்கள் இறந்த வலி – வேதனை இன்னும் நீங்கவில்லை. ஆனால் அதற்கும் எங்கள் மீது பழிபோட்டது தாங்கமுடியவில்லை. நாங்கள் இப்போது கூட்டணி ஆட்சியை அமைந்துள்ளோம். 2026ம் ஆண்டு தேர்தலில் சாதி, மதம், காசு கொடுத்து ஓட்டு வாங்குவதை உடைத்துள்ளோம். இது ஆரம்பம் தான், கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.

இந்த 40 நாளில் விஜய் என்ன சாதித்துவிட்டார் என கேட்கின்றனர். சிங்கப்பெண் படை, 717 டாஸ்மாக் மூடல், அம்மா உணவங்கள் புதுப்பித்தல், போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கை, 200 யூனிட் மின்சாரம் இலவசம், பகல் கொள்ளை தடுப்பது, சட்டவிரோதமாக செயல்பட்ட கல் குவாரிகளுக்கு சீல் வைத்தது, அனைத்து துறைகளில் லஞ்சம் – ஊழல் இல்லாத நிலையை உருவாக்க நடவடிக்கை, நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதனை படித்து பார்த்தாலே கண்ணை கட்டுகிறது.

பதவி உயர்வு, பதவி இடமாற்றத்துக்கு பணம் வாங்க மாட்டோம். தற்போது தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை ஏற்பட்டுள்ளதை கூட நிர்வாக குளறுபடி என கூறுகின்றனர். இதற்கு சிலர் வேண்டுமென்றே சதி செய்கிறார்கள். இதனை தடுக்க உயர்மட்ட குழு அமைத்துள்ளோம். அவர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காணப்படும். விவசாயிகள் போராட்டத்திற்கு கூட எதிர்க்கட்சி தூண்டுதலே காரணம். விவசாயிகளுக்கு இந்த அரசு பக்கபலமாக இருக்கும்.

தமிழ்தாய் பாடப்படுவது குறித்து ஒன்றிய அரசுக்கு தெளிவாக தெரிவித்துள்ளோம். தமிழக அரசு நிகழ்ச்சிகளில் தமிழ் தாய்க்கு தான் முதலிடம் வழங்கப்படும். அதில் சமரசம் இல்லை. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மருத்துவ படிப்பில் தேர்வு செய்ய மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம். இந்த மூலம் தமிழகத்திற்கு நீட் விலக்கு கேட்டுள்ளோம். தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் உறுதியாக கடைபிடிக்கப்படும். இதில் மாற்றுக்கருத்து இல்லை. சட்டம் ஒழுங்கு கடுமையாக கையாளப்படும். பெண்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும். இந்த பிரச்னைகள் எல்லாம் கடந்த மே 10ம் தேதிக்கு பிறகு வந்ததில்லை. கடந்த ஆட்சியில் 9 மாதமாக சட்டம்-ஒழுங்கு டிஜிபி இல்லை. இப்போதுதான் அதற்கு விடை கண்டுபிடித்தோம். போதை பொருள் தடுப்பு யார் கையில் இருந்தது. ஆரம்பத்தில் ஏன் கண்ட்ரோல் பண்ணவில்லை. புதிதாக ஒரு வெப்பன் கொண்டு வந்துள்ளார்கள்; அவங்க தயவால்தான் நம்ம ஆட்சி நடக்கிறதாம்.

மக்கள் தயவால் இந்த ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது. மனசாட்சி உள்ள சக்திகளோட ஆதரவால் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. உங்கள் தயவால் ஆட்சி நடக்கவில்லை. மக்கள் தயவால் நடக்கிறது. நீங்கள் அனுப்பி வைத்தால், கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது? சமூக நீதி அரசு என்று சொன்னீர்கள். உங்கள் அமைச்சரவையில் எத்தனை பட்டியலின அமைச்சர்கள் இருந்தார்கள்? நாங்கள் 8 பட்டியலினத்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கியுள்ளோம்.

எங்கள் அரசில் 4 பெண் அமைச்சர்கள் உள்ளனர். நீங்கள் எத்தனை பெண்களுக்கு அமைச்சர் பதவி வழங்கினீர்கள்? திமுக தயவால் தவெக ஆட்சி நடக்கிறதா? இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் சுயேச்சையாக முடிவெடுத்து எங்களுக்கு ஆதரவு அளித்தனர். நாம் யாருடைய பி டீமும் கிடையாது, Purely Peoples Team. இவ்வாறு அவர் பேசினார்.

* ஒன்றிய அரசுடன் மோதல் இல்லை
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் நேற்று பேசும்போது, ”நாம் ஒன்றியத்தில் கூட்டுறவு கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையை கொண்டவர்கள்தான் என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறோம். தற்போதைய ஒன்றிய அரசை சார்ந்த கட்சியுடன் அரசியலில் கொள்கையளவில் நேரெதிராக நிற்பவர்கள்தான் நாம்; அதே சமயத்தில் எதற்கெடுத்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஒன்றிய அரசோடு மோதல் போக்கை விரும்புபவர்கள் நாமில்லை.

நமக்கு எப்போதும் தமிழகத்தின் வளர்ச்சி மட்டும்தான் முக்கியம். அதற்காக நம்முடைய அரசியல்ரீதியான கொள்கைகளையும், மாநில உரிமைகளையும் கொஞ்சம்கூட விட்டுக்கொடுக்கவே மாட்டோம். அதில் மிக தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறோம். இனியும் இப்படித்தான் இருப்போம். அதில் ஒருபோதும் மாற்றமே இருக்காது” என்றார்.

Related Stories: