100 சதவீதம் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு கோலப்போட்டி கலெக்டர் பார்வையிட்டார்

தர்மபுரி, மார்ச் 9:  தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சார்பில், 100 சதவீதம் வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில், விழிப்புணர்வு வண்ண கோலப்போட்டி நேற்று நடந்தது.  தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், வாக்களிப்பதன் அவசியம் குறித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் 100 சதவீதம் வாக்களிப்போம், வாக்காளர் உரிமை, தேர்தல் நாள், ஓட்டுக்கு வாங்க மாட்டோம் நோட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் லட்சினை (லோகோ) போன்ற வடிவங்கள் கலர்கோலப் பொடிகளால் உருவாக்கப்பட்டிருந்தன.

மேலும், 100 சதவீதம் வாக்களிப்போம் என்று வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 32 குழுக்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்களால் வண்ண கோலங்கள் போடப்பட்டிருந்தன. ஓவிய கோலங்களை பார்வையிட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான கார்த்திகா, மகளிர் சுயஉதவிக்குழுவினர் தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். தொடர்ந்து, கலெக்டர் கார்த்திகா தலைமையில் அனைத்து அலுவலர்களும் நேர்மையாக வாக்களிக்க வாக்காளர் உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, சப் கலெக்டர் பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பொது நாராயணன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தணிகாசலம், முத்தையன், சாந்தி, நாசீர் இக்பால், உதவி திட்ட அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: