சென்னை: தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட நிதிநிலை குறித்த, தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை படித்து பார்த்ததாகவும், அதில் பெரிதாக ஆச்சரியப்படும் அளவுக்குப் புதிய தகவல்கள் எதுவுமே இல்லை என்றும் அண்ணாமலை விமர்சித்து உள்ளார்.
இதில் உள்ள பெரும்பாலான தகவல்கள் ஏற்கனவே தெரிந்தவையே என்றும் கூறியுள்ளார். தமிழகத்தில் வேலை செய்யும் வயதுடைய மக்கள் தொகை, வரும் 2031 ஆம் ஆண்டில் இருந்து குறையத் தொடங்கும் சூழலில், மாநிலத்தின் வருவாய் அடித்தளத்தை வலுப்படுத்தவும், நிதிநிலையை சீர்செய்யவும் மிகவும் குறுகிய காலமே உள்ளது மிகவும் கவலைக்கிடமான விஷயமாகும் என்று அண்ணாமலை குறிப்பிட்டு உள்ளார்.
எனவே தவெக அரசு இந்த வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி, செயல்படாமல் இருக்கக் கூடாது. இந்த பாதிப்புகளைச் சரிசெய்யத் தேவையான, உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இது தொடர்பாக, பொருளாதார நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் மட்டுமின்றி, தொழில், வர்த்தகம், நிர்வாகம், தொழில்நுட்பம், சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வல்லுநர்களையும் உள்ளடக்கிய,ஒரு “செயல்திறன் மிக்க” ஆலோசனைக் குழுவை அமைத்து, தமிழகத்தை வலுவான நிதிப் பாதைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டு கொண்டுள்ளார்.
