திண்டிவனம்: பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையிலான விரிசல் காரணமாக நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாமக 2 அணிகளாக தேர்தலை சந்தித்தன. இதில் மாம்பழ சின்னத்தில் போட்டியிட்ட பாமக 4 இடங்களில் வெற்றிபெற்றது. ராமதாஸ் அணி படுதோல்வியை சந்தித்தது. அதைத் தொடர்ந்து நிர்வாகிகளிடம் கடந்த மாதம் குறைகேட்பு சந்திப்பை நடத்திய ராமதாசிடம், கட்சியை மீட்பதற்கான ெதாடர் நடவடிக்கைகள், உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் சோர்வடைந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சித் தாவாத வகையில் அவர்களை ஊக்கப்படுத்துவது குறித்து வலியுறுத்தினர்.
அப்போது, தேர்தலில் தவறான கூட்டணியை அமைத்துவிட்டேன். வருங்காலங்களில் நிர்வாகிகளின் கருத்தறிந்து சரியாக செயல்படுவேன். அதேபோல் எனது உயிருள்ளவரை கட்சியை (பாமக) மீட்கும் போராட்டத்தை தொடருவேன். இந்த பயணத்தில் என்னுடன் இருப்பவர் இருக்கலாம், போக நினைக்கிறவர்கள் போகலாம், அவர்களின் சொந்த முடிவுக்கே விட்டுவிடுகிறேன் என விரக்தியுடன் ராமதாஸ் கூறியதாக தகவல் வெளியாகின.
இதனிடையே சட்டப்பேரவை தேர்தலுக்குபின் வழக்கமான (வியாழன்) தைலாபுரம் செய்தியாளர்கள் சந்திப்பை ராமதாஸ் அடியோடு நிறுத்தி விட்டார். கட்சியின் கவுரவ தலைவரான ஜிகே மணி, சேலம் மேற்கு முன்னாள் எம்எல்ஏ அருள் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளும் ராமதாசை அவரது வீட்டிற்கு வந்து அடிக்கடி சந்திப்பத்தை தவிர்த்து விட்டனர். இதனால் தற்போதைய சூழலில் ராமதாசும், அவரது மூத்த மகள் காந்தியும் தமிழக அரசின் மக்கள் நலன்சார்ந்த பிரச்னைகளுக்கு மட்டும் அறிக்கை வாயிலாக குரல் கொடுத்து வருகின்றனர். இதனால் தைலாபுரம் தோட்டம் பரபரப்பின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
