சென்னை: சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தனகோட்டி நடுநிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் 2026-27ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நேற்று தொடங்கி வைத்தார். புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார். மேலும் 1ம் வகுப்பில் இணைந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு மாலை அணிவித்து அவர்களை அரசு பள்ளிக்கு வரவேற்கும் விதமாக சிறப்பு செய்தனர்.
இதை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நிருபர்களிடம் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் 4 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 1,52,625 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். பிரதமரை முதலமைச்சர் சந்தித்த பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக பேசிய தகவல்கள் எல்லாம் வெளியிடப்பட்டது. சிலவற்றை சட்டமன்றத்தில் தீர்க்கிறோம், சிலவற்றை நீதிமன்றத்தில் தீர்க்கிறோம்.
பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய பாட புத்தகங்களில் இலவச தொலைபேசி எண்கள் (toll free) நம்பர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான போக்சோ வழக்குகள் தெரிந்தவர்கள் மூலமாகவே நடக்கிறது. குழந்தைகள் அதனை தொடர்பு கொண்டு புகாரை பதிவு செய்யலாம். பள்ளிக்கல்வித்துறை, காவல்துறை, சமூக நலத்துறை பல்வேறு துறைகள் குழந்தைகள் நலனில் பாதுகாப்பை உதவி செய்யும்.
இதனை மீறியும் தவறுகள் நடந்தால், உடனடியாக அந்த பிரச்னைகள் தீர்க்கப்பட்டு அந்த நபருக்கு தண்டனை வழங்கப்படும். உச்ச நீதிமன்றத்தில் துறை சார்ந்த தீர்ப்புகளை தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கிறோம். டெட் தேர்வை பொறுத்தவரை 2 ஆண்டுகளில் தேர்வு ஆக வேண்டும் என்பது தற்போது 3 ஆண்டாக மாறிவிட்டது. இது நீதித்துறை சம்பந்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் மார்ச் 1ம் தேதியில் இருந்து அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது வரை ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 625 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளதாகவும் 4 லட்சம் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்ப்பதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதாகவும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
