சென்னை: கோயில்களின் உபரி நிதியை தமிழ்நாடு அரசின் நிறுவனங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கும் வகையில், அறநிலையத்துறை சட்டத்தின் முதலீட்டு வீதிகளில் திருத்தம் செய்து, கடந்த பிப்ரவரி மாதம் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், கோயில் நிதியை வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய தடைவிதிக்கக் கோரியும் சென்னையை சேர்ந்த இண்டிக் கலெக்டிவ் அறக்கட்டளை மற்றும் ஆலய வழிபாட்டாளர் சங்கம் ஆகியவற்றின் தலைவரான டி.ஆர்.ரமேஷ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.ஜெகநாத், 2,700 கோடி ரூபாய் கோயில் நிதி சட்டவிரோதமாக அரசு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கோயில்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்யுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ள கோயில் நிதி பாதுகாக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்து மனு தாக்கல் செய்தார். முதலீட்டின் பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசின் இந்த உத்தரவாதத்தை பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
