சென்னை: தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயிலின் உக்கிரம் என்று அழைக்கப்படுகின்ற கத்திரி வெயில் கடந்த 4ம் தேதி தொடங்கியது. சுமார் 25 நாட்கள் வாட்டி எடுத்து வந்த கத்திரி வெயில் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. கத்திரி வெயில் முடிந்தாலும் வெயிலின் தாக்கம் என்பது குறைய வில்லை. இன்று வரை வெயிலின் தாக்கம் இருக்கும். தொடர்ந்து நாளை முதல் வெயிலின் அளவு படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் இன்று 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 1.5 கிமீ முதல் 7.6 கிமீ உயரத்தில் மத்தியகிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருச்சி, நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர், சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும் என வானிமை மையம் தெரிவித்துள்ளது.
