டெண்டர் கோரப்பட்டு திடீரென ரத்து செய்யப்பட்டதால் சிக்கல் ரேஷன் கடையில் துவரம் பருப்பு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: வெளிசந்தையில் விலை உயரும் ஆபத்து

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் துவரம் பருப்பு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காரணம், இதற்கான டெண்டர் தமிழக அரசு கோரப்பட்டு, திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளளர். தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் மாதம்தோறும் இலவசமாக 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இதுதவிர சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால், மொத்தமுள்ள 2 கோடியே 26 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களும் மாதம்தோறும் பயன் அடைந்து வருகிறார்கள். குறிப்பாக நியாய விலை கடைகள் மூலம் கிடைக்கும் துவரம் பருப்பு பொதுமக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாகவும், விலை குறைவாகவும் இருக்கிறது. வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.130 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், நியாய விலை கடைகளில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள நியாய நிலை கடைகளில் ஜூன் மாதம் 2வது வாரம் வரைக்கான துவரம் பருப்பு மட்டுமே ஸ்டாக் உள்ளது. ஜூன் 15ம் தேதிக்கு மேல் துவரம் பருப்பு கேட்டு, நியாய விலை கடைக்கு சென்றால் பருப்பு கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. வழக்கமாக இரண்டு மாதத்துக்கான துவரம் பருப்பு அந்தந்த ரேஷன் கடைகளில் ஸ்டாக் வைக்கப்படும். ஆனால், இதுவரை பருப்பு வழங்கப்படவில்லை.

அனைத்துக் கடைகளிலும் அடுத்த சில நாட்களில் வந்து விடும் என்ற பதில் தான் கிடைக்கிறதே தவிர, துவரம் பரும்பு விநியோகிக்கப்படுவதற்காக அறிகுறி இருப்பதாக தெரியவில்லை என்று ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகிறார்கள். இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘நியாய விலை கடைகள் மூலம் சுமார் 2.26 கோடி ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 1 கிலோ துவரம் பருப்பு மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதம் தேர்தல் நடைமுறை அமலில் இருந்ததால் புதிதாக டெண்டர் கோரப்படவில்லை. 2 வாரங்களுக்கு முன் புதிய ஆட்சி பொறுப்பேற்றது. கூட்டுறவு மற்றும் உணவு துறைக்கு அமைச்சர்கள், செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் கவனத்திற்கு, துவரம் பருப்பு கொள்முதல் குறித்த தகவல் கொண்டு செல்லப்பட்டது. அதன்படி, உணவு வழங்கல் துறை மூலம் கடந்த 22ம் தேதி துவரம் பருப்புக்கான டெண்டர் கோரப்பட்டு இருந்தது.

29ம் தேதியுடன் (நேற்று) டெண்டர் முடிக்கப்பட்டு, திறக்கப்பட வேண்டும். அதன்படி, குறைந்த விலையில் பருப்பு கொள்முதல் செய்யும் நிறுவனத்துக்கு ஆர்டர் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், துவரம் பருப்புக்கான டெண்டரை தமிழக அரசு திடீரென ரத்து செய்து விட்டது. அதற்கான காரணம் எதுவும் கூறப்படவில்லை. இதனால், தமிழகம் முழுவதும் ஜூன் 2வது வாரத்துக்கு பிறகு நியாய விலை கடைகளில் துவரம் பருப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இனி, புதிய டெண்டர் கோரப்பட்டு, குறிப்பிட்ட நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கினாலும், தமிழகம் முழுவதும் அந்த நிறுவனம் துவரம் பருப்பு சப்ளை செய்வது காலதாமதம் ஏற்படும். இதுபோன்ற பிரச்னைகளால் வரும் நாட்களில் நியாய விலை கடைகளில் துவரம் பருப்பு கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுவது உறுதி” என்று கூறினர். நியாய விலை கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதன் நோக்கமே வெளிச்சந்தையில் அவற்றின் விலைகளை கட்டுப்படுத்துவது தான்.

ஆனால், புதிதாக ஆட்சிக்கு வந்தவர்கள் நியாயவிலை கடைகளுக்கு துவரம் பருப்பு முறையாக வழங்காவிட்டால், வெளிச்சந்தையில் பருப்பு விலை கடுமையாக உயரும் ஆபத்து உள்ளது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பசியாறுவதற்கு நியாயவிலை கடைகளில் மலிவு விலையில் வழங்கப்படும் பொருட்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து முன்கூட்டிய திட்டமிட வேண்டும்.

* பாக்கெட்டில் ரேஷன் பொருள் கிடைக்குமா?
தமிழ்நாட்டில் உள்ள நியாய விலை கடைகளில் நீண்டகாலமாக நிலவும் எடை குறைவு, கலப்படம், கடத்தல் உள்ளிட்ட முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் ‘பாக்கெட்’ வடிவில் சீல் வைக்கப்பட்டு வழங்கும் புதிய திட்டத்தை தவெக தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஏழை, எளிய மக்களின் உணவு பாதுகாப்பை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் வெங்கடரமணன் இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். தற்போது ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை, உளுந்து உள்ளிட்ட பொருட்கள் திறந்த மூட்டைகளில் இருந்து கைகளால் அளந்து வழங்கப்படுவதால் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. இதை முழுமையாக மாற்றி, கிடங்குகளிலேயே துல்லியமான இயந்திரங்கள் மூலம் எடை போட்டு, சீல் செய்யப்பட்ட பாக்கெட்டுகளாக விநியோகிக்க அரசு தீவிரம் காட்ட வேண்டும்.

Related Stories: