5 சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள் 12,810 பேருக்கு கொரோனா தடுப்பூசி

தர்மபுரி, மார்ச் 4: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியாற்ற உள்ள அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர் என 12,810பேருக்கு, கொரோனா  தடுப்பூசி போடும் பணிகள் இன்று தொடங்குகிறது. இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் பணியாற்ற உள்ள அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர் என 12810 பேருக்கு தடுப்பூசி போடும் பணி இன்று (4ம் தேதி) முதல் தொடங்குகிறது. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கலெக்டர் அலுவலகம், பாலக்கோடு, பென்னாகரம், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைகள், தர்மபுரி மற்றும் மாரண்டஅள்ளி, பாளையம்புதூர், காரிமங்கலம், ஏரியூர், மொரப்பூர், தீர்த்தமலை, பையர்நத்தம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 20 மையங்களில், காலை 9 மணி முதல் மாலை 5 வரை கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்குப்பதிவு நிலைய அலுவலர்கள் உள்ளிட்ட தேர்தல் பணியாற்ற உள்ள அனைத்து அலுவலர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். தர்மபுரி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கார்த்திகா நேற்று கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார். தர்மபுரி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சப் கலெக்டர் பிரதாப், 2வது முறையாக நேற்றும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். பிஆர்ஒ பாரதிதாசனும் நேற்று தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

Related Stories:

>