கூட்டுறவு சர்க்கரை ஆலை முன் பெண் விவசாயி திடீர் தர்ணா

பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 4: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே கெடகாரஅல்லியை சேர்ந்த சங்கர் மனைவி பாரதி(40). இவர் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அங்கத்தினராக உள்ளார். இவர் தனது விவசாய நிலத்தில், சுமார் 6 ஏக்கருக்கு மேல் கரும்பு நடவு செய்துள்ளார். இதனை வெட்டுவதற்காக, கடந்த 25.12.2020ல் ஆலை நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளனர். ஆனால், கடந்த மாதம் வரை வயலில் கரும்பு வெட்டப்படவில்லை. இதையடுத்து கடந்த மாதம் 28ம் தேதி, சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சென்ற பாரதி, அதிகாரிகளிடம் கரும்பு வெட்டாதது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து கடந்த 1ம் தேதி சென்ற பணியாளர்கள், அவரது வயலில் இருந்த சுமார் 10டன் கரும்பை மட்டும் வெட்டி, டிராக்டரில் எடுத்துச் சென்றனர். 2ம் தேதி வயலில் கரும்பை வெட்டினர். ஆனால், டிராக்டர் இல்லாததால், கரும்பை வயலிலேயே போட்டுச் சென்றனர். இதையடுத்து நேற்று வயலில் இருந்த வெட்டி வைக்கப்பட்ட பாதி கரும்பை மட்டும் டிராக்டரில் எடுத்து சென்றனர்.இதனால் ஆத்திரம் அடைந்த பாரதி, நேற்று மாலை சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை சென்று, கரும்பை முழுமையாக வெட்டி எடுக்காத அதிகாரிகளை கண்டித்து, ஆலையின் நுழைவு வாயிலில் அமர்ந்து நேற்று மாலை  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது கரும்புகள் முழு வதையும் அறுவடை செய்வதாக அதிகாரிகள் கூறியதன் பேரில்,இரவு 8:45மணியளவில் போராட்்டத்தை கைவிட்டார்.இது குறித்து பாரதி கூறுகையில், ‘வயலில் உள்ள கரும்பை வெட்ட அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர். எனவே, அதிக பணியாட்களை கொண்டு, வயலில் உள்ள கரும்புகள் அனைத்தை வெட்டிவிட்டு, அதற்கான தொலையை எனக்கு தர வேண்டும்,’ என்றார்.

Related Stories: