பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி எஸ்பி. அலுவலகம் முன் மறியல் மாதர் சங்கத்தினர் 57 பேர் கைது

கோவை, மார்ச் 3: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாதர் சங்கத்தினர் நேற்று மாலை குவிந்தனர். தமிழக சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் பெண் எஸ்பி.யிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பணியில் இருந்து நீக்கம் செய்யவேண்டும். சிறப்பு டி.ஜி.பி.க்கு ஆதரவாக செயல்பட்டு எஸ்பி. கண்ணன் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் மாதர் சங்கத்தினர் எஸ்பி. அலுவலகம் நோக்கி திரளாக பேரணி சென்றனர்.

பெண்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும். அத்துமீறும் போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோஷமிட்டு சென்றனர். போலீஸ் தடையை மீறி ஊர்வலமாக சென்ற மாதர் சங்கத்தினரை ரேஸ்கோர்ஸ் போலீசார் தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் மாதர் சங்கத்தினர் தடை மீறி மாவட்ட எஸ்பி. அலுவலகத்திற்குள் நுழைந்து முற்றுகை போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால் போலீசார் நுழைவாயில் முன் தடுத்து நிறுத்தி விட்டனர். ஆவேசத்தில் இருந்த மாதர் சங்கத்தினர் ஸ்டேட் பாங்க் ரோட்டில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மாதர் சங்க அகில இந்திய துணை செயலாளர் சுதா, மாநில தலைவர் வாலன்டினா, சுகந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டம் செய்த 57 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: