தர்மபுரியில் அனைத்து கட்சி கூட்டம் உளவுத்துறை, துப்பறிவு பிரிவு போலீசாரை மாற்ற வேண்டும்

தர்மபுரி, மார்ச் 2:தர்மபுரி மாவட்டத்தில் உளவுத்துறை, துப்பறிவு போலீசாரை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும் என அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக வலியுறுத்தியுள்ளது. தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தேர்தல் நன்னடத்தை விதிகளை கடைபிடிப்பது தொடர்பாக, அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கார்த்திகா தலைமை வகித்தார். எஸ்பி பிரவேஷ்குமார், டிஆர்ஓக்கள் ராமமூர்த்தி, ரஹமத்துல்லாகான், சங்கர், தர்மபுரி சப் கலெக்டர் பிரதாப், தேர்தல் அலுவலர்கள் தணிகாசலம், முத்தையன், சாந்தி, நசீர் இக்பால், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன் மற்றும் திமுக கீரைவிஸ்வநாதன், அதிமுக விஜயன், அசோக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் ஜெயந்தி,பாமக வெங்கடேஸ்வரன், பெரியசாமி, தேமுதிக குமார், பாஜக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

திமுக சார்பில் கீரை விசுவநாதன் பேசுகையில், ‘ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும். பாரபட்சமில்லாமல் தேர்தல் சட்டத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் துப்பறியும் பிரிவு போலீசார், உளவுத்துறை போலீசார், பெரும்பாலும் உள்ளூரில் பணியாற்றுபவர்களாக உள்ளனர். அவர்களை வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். குறிப்பாக, அரூர் உட்கோட்ட காவல்நிலையத்தில் பணியாற்றும் நபர்களை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும். பூத் சிலிப் வழங்குவதில் முறைகேடு நடக்காமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார். பாமக சார்பில் வெங்கடேஸ்வரன் பேசுகையில், ‘வாக்காளர்கள் ஓட்டு போடும் போது, அதிகாரிகள் பார்த்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார். அதிமுக சார்பில் அசோக்குமார் பேசுகையில், ‘கடந்த ஒருவருடத்திற்கு முன்பு வரைந்த சுவர் விளம்பரத்தை அழிக்க விதிவிலக்கு வழங்க வேண்டும்,’ என்றார்.

பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகா பேசியதாவது: அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஊர்வலங்கள், ஒலிபெருக்கி மற்றும் வாகனங்கள் பயன்படுத்துதல், வாகனங்களில் கொடி கட்டுதல் உள்ளிட்டவற்றுக்கு முறையான அனுமதி பெற வேண்டும். அமைதியான முறையில் வாக்கு பதிவை நடத்த, அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அரசியல் கட்சிகள் நடத்தும் பொது கூட்டங்களுக்கு முன் அனுமதி பெற, ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதில் பிரச்னைகள் ஏதேனும் இருப்பின், சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குப்பதிவு மையங்களில், வாக்குப்பதிவின் போது சிசிடிவி மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

Related Stories: