சூலூர், மே 9: கொலை செய்யப்பட்டதாக புகார் கூறி, கோவை இஎஸ்ஐ மருத்துவமனை முன்பு சாலையில், கட்டிட தொழிலாளி சடலத்தை ஸ்ட்ரெச்சரில் வைத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையம் சரஸ்வதி கார்டன் பகுதியில் நேற்று காலை ஆண் சடலம் தூக்கில் தொங்கியபடி இருந்தது. இதைப்பார்த்து அப்பகுதி பொதுமக்கள் சூலூர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த நபரின் பாக்கெட்டை சோதனை செய்தபோது அதில் செல்போன் இருந்தது. அதை எடுத்து போலீசார் இறந்து போனவரின் தாய் ராக்காயி என்பவருக்கு போன் செய்தனர்.
அப்போது இறந்து போனவர், ராக்காயி மகன் மகா மகேஸ்வரன் (24) என்பது தெரியவந்தது. மேலும், மகா மகேஸ்வரனுக்கு திருமணமாகி பரமேஷ்வரி என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், 2வது பிரசவத்திற்காக அவரது மனைவி மருத்துவமனையில் உள்ளதாக கூறப்படுகிறது. மகா மகேஸ்வரன் சூலூரில் உள்ள அவரது தாய் வீட்டில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார்.
