ஊதியம் வாங்குவதில் தகராறு பெட்ரோல் ஊற்றி பெண் மேலாளரை எரித்து கொல்ல முயற்சி

 

கோவை, மே 9: ஊதியம் வழங்காததால் ஆத்திரம் அடைந்து பெண் மேலாளர் மீது பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை ராமநாதபுரம் அருணாச்சல தேவர் காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (34). இவர் சுங்கம் ரவுண்டானா அருகே உள்ள தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனத்தில் பணிபுரியும் பாதுகாவலர்களுக்கு மாதந்தோறும் 11 முதல் 15ம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கிருஷ்ணவேணி அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, அங்கு காவலாளியாக பணிபுரிந்து வரும் தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த குபேந்திரன் (39) என்பவர் அங்கு வந்தார். அவர் ஊதியம் வாங்குவது குறித்து கிருஷ்ணவேணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து, கிருஷ்ணவேணி மீது ஊற்றியுள்ளார். அவர், கிருஷ்ணவேணியை “உன்னை உயிரோடு எரிக்காமல் விடமாட்டேன்” என்று மிரட்டி தீவைக்க முயன்றார். இதனால், அதிர்ச்சியடைந்த கிருஷ்ணவேணியின் அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்த ஊழியர்கள் ஓடி வந்து குபேந்திரனை மடக்கிப் பிடித்தனர்.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், குபேந்திரனை கைது செய்து பெட்ரோல் பாட்டிலை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: