குறிச்சி குளத்தை சீரமைக்க கோரிக்கை

கோவை, மே 6: கோவை நொய்யல் ஆற்று நீர் ஆதாரத்தில் சோழர் காலத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் குறிச்சி குளம் உருவாக்கப்பட்டது. 372 ஏக்கர் பரப்பிலான இந்த குளம். பாழடைந்து சிதிலமாகி இரு பிரிவாக கிடந்தது. இந்த குளத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீரமைக்கும் பணியை கோவை மாநகராட்சி மேற்கொண்டது. 5 கிலோ மீட்டர் சுற்று பரப்பளவில் குறிச்சி குளம் சுமார் 50 கோடி ரூபாய் செலவில் சீரமைத்துள்ளது. குளத்தின் கரைகள் 4 மீட்டர் அகலத்தில் வாக்கிங் ஜாக்கிங் சைக்கிளிங் செல்லும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியை நினைவு கூறும் வகையில் 5 மாடுபிடி வீரர்கள் காங்கேயம் காளையை மடக்க முயற்சிக்கும் வகையில் பைபர் கட்டுமானத்தில் 12 அடி உயரத்துக்கு சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளது. குளத்தின் ஒரு பகுதியை குறிப்பாக குனியமுத்தூர் அரசு பள்ளியை ஒட்டியுள்ள வாக்கிங் தளம் பயன்படுத்த முடியாத அளவிற்கு இருக்கிறது. இங்கே வாக்கிங் பாதை பூட்டு போட்டு அடைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் வடக்கு பகுதி குளக்கரை முட்புதர் மண்டி கிடக்கிறது. திருவள்ளுவர் சிலை உள்ள குளப்பகுதியும் சீரமைப்பின்றி கிடக்கிறது. வாக்கிங் செல்லும் பாதை அருகே அடர்ந்த புதர் செடிகளும் பாம்பு நடமாட்டமும் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குளக்கரையை முறையாக பராமரிக்க மாநகராட்சி முன் வரவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

 

Related Stories: