கோவை, மே 9: ஜாம்பி போதை பொருள் பயன்படுத்தியது போன்று நடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வடமாநிலங்களில் தற்போது ஜாம்பி என்ற போதை பொருள் புழக்கத்தில் இருந்து வருகிறது. அதனை பயன்படுத்துபவர்கள் பல மணி நேரம் அசைவின்றி ஒரே இடத்தில் நிற்பது போன்று சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் வாலிபர் ஒருவர் ஜாம்பி போதை பொருளை பயன்படுத்தி அசைவின்றி நிற்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை கண்டு கோவை மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீஸ் கமிஷனர் கண்ணன் அந்த வீடியோவில் உள்ள வாலிபரை பிடித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, அந்த வீடியோவில் உள்ள வாலிபர் கரும்புக்கடை ஆசாத் நகரை சேர்ந்த பாட்ஷா (28) என்பதும், அவர் சென்னையில் மீன் கடையில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து கரும்புக்கடை போலீசார் சென்னை விரைந்து சென்று பாட்ஷாவை மடக்கி பிடித்தனர். அவரை கோவை அழைத்து வந்து விசாரித்தனர்.
இதில் அவர் ஜாம்பி போதை பொருளை பயன்படுத்தவில்லை என்றும், தான் அது போன்று நடித்ததாகவும் தெரிவித்துள்ளார். போலீசார் பொதுமக்களை அச்சுறுத்திய பாட்ஷா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
