வெள்ளிங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி

கோவை, மார்ச் 1: கோவை வெள்ளிங்கிரி மலையேற பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, மலையேற்றத்தில் பக்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூண்டி அடிவாரத்தில் கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் வெள்ளிங்கிரி மலை உள்ளது. சுமார் 5.5 கி.மீ. தூரம் செல்லும் மலைப்பாதையில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை ஆகியவற்றை கடந்து சென்றால் 7வது மலையில் உள்ள சுயம்பு லிங்கத்தை தரிசிக்க முடியும். இந்த மலை பாதை மிகவும் கரடுமுரடானதாக இருக்கும். இந்த மலைப்பாதையில் பக்தர்களுக்கு ஏற ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை அனுமதி வழங்கப்படும். இந்த நாட்களில் ஏராளமானவர்கள் மலையேற்றத்தில் ஈடுபடுவார்கள்.

இந்நிலையில், இந்த வருடம் வெள்ளிங்கிரி மலையேற்றத்தில் ஈடுபட பக்தர்களுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று முதல் மலைப்பாதையில் கடைகள் அமைக்கப்படுகிறது. இதற்கான டெண்டர் அறநிலையத்துறை சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மலையேற்றத்தில் ஈடுபடும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லவும், இரவில் மலையில் தங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போளூவாம்பட்டி ரேஞ்சர் சரவணன் கூறியதாவது: மாவட்ட வன அலுவலரின் உத்தரவின்பேரில் வெள்ளிங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மலையேற்றத்தில் ஈடுபடும் பக்தர்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மலையேற்றத்தின் போது பக்தர்கள் எளிதில் தீ பிடிக்கும் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல கூடாது.

அதிகாலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டு, இரவிற்குள் கீழே திரும்ப வேண்டும். மலையில் விலங்குகள் நடமாட்டம் இருப்பதால் இரவில் மலையில் தங்க கூடாது. மேலும், முள்ளங்காடு முதல் வெள்ளிங்கி ஆண்டவர் கோயில் வரை உள்ள சாலையில் இரவு நேரத்தில் யானை நடமாட்டம் இருக்கிறது. இதனால், இருசக்கர வாகனத்தில் மாலை 6 மணிக்கு மேல் வருவது, பூண்டி சாலையில் இரவு நேரத்தில் நடந்து கோயிலுக்கு செல்வதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: