உரிய ஆவணங்களின்றி ₹50ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல்

தர்மபுரி, மார்ச் 1: தர்மபுரி மாவட்டத்தில், ₹50ஆயிரத்திற்கு மேல் சரியான ஆவணம் இல்லாமல் பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கார்த்திகா தலைமை வகித்தார். கூட்டத்தில், எஸ்பி பிரவேஷ்குமார், டிஆர்ஓக்கள் ராமமூர்த்தி, ரஹமதுல்லாகான் (சிப்காட்), தர்மபுரி சப் கலெக்டர் பிரதாப், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) நாராயணன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தணிகாசலம், முத்தையன், சாந்தி, நசீர் இக்பால், டிஎஸ்பிக்கள் அண்ணாதுரை, சீனிவாசன், விஜயராகவன், தமிழ்மணி, உதவி இயக்குநர் ஊராட்சிகள் சீனிவாச சேகர், அனைத்து வட்டாட்சியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கார்த்திகா பேசியதாவது:

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில், தலைவர்களின் புகைப்படங்கள் மற்றும் அரசு விளம்பரங்கள் அகற்றவும் அரசு கட்டிடங்கள், சாலை மேம்பாலங்கள், பொது இடங்களில் எழுதப்பட்டுள்ள விளம்பரங்கள் 48மணி நேரத்தில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பறக்கும்படை குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுக்கள், ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனத்தில் தேர்தலை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ளது. ₹50 ஆயிரத்திற்கும் மேற்பட்டு சரியான ஆவணம் இன்றி பணம் எடுத்துச்சென்றால் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்.

பல்வேறு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள், தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள பணிகளில், முழு ஒத்துழைப்புடன் ஈடுபட வேண்டும். பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில், அமைதியான முறையில் தேர்தல் நடைபெற காவல்துறை அலுவலர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும். சோதனை சாவடிகளில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம், பரிசு பொருட்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மாவட்டத்தில் சட்டமன்ற பொது தேர்தல் சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் நடைபெற, அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து முழு ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் ேபசினார். முன்னதாக இந்திய தேசிய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இணையவழி பதிவுகள் மற்றும் செயலிகள் குறித்து, தேர்தல் தொடர்பான அலுவலர்களுக்கு, மாவட்ட தேசிய தகவலியல் மைய அலுவலர் ரகுபதி பயிற்சி வழங்கினார்.

Related Stories: