மாவட்டத்தில் 40 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கம்

கிருஷ்ணகிரி, பிப்.26: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்; தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த வைப்புநிதி ₹7 ஆயிரம் கோடி திருப்பி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 போக்குவரத்து பணிமனைகளில் இருந்து, வழக்கமாக 213 புறநகர் பஸ்களும், 300க்கும் மேற்பட்ட டவுன் பஸ்களும் இயக்கப்படுகிறது. போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால், நேற்று 40 சதவீத பஸ்கள் மட்டுமே ஓடின. கர்நாடக மாநிலத்தில் இருந்து அம்மாநில பஸ்கள் வழக்கம் போல் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்டிற்கு வந்து சென்றன. இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

ஓசூர்: அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஓசூர் பணிமனை முன், மதசார்பற்ற தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகளை, கிருஷ்ணகிரி மாவட்ட தொமுச கவுன்சில் செயலாளர் கோபாலகிருஷ்ணன் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது நிர்வாகிகள் சோமுசுந்தரம், பாலமுருளி, முனிராஜ், மனோகரன் மற்றும் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள்  உடனிருந்தனர். 

Related Stories: