அனுவாவி சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

பெ.நா.பாளையம், பிப். 26:  கோவையை அடுத்த பெரிய தடாகத்தில் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி  கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த மாதம் திருக்கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள பாத விநாயகர், கன்னி விநாயகர், அருணாச்சலேஸ்வரர் அனுவாவி ஆஞ்சநேயர், நவகிரகங்கள், இடும்பன் சுவாமி, சுப்ரமணிய சுவாமி வள்ளி தெய்வானை சன்னதிகளில் உள்ள கோபுரங்களுக்கு வர்ணம் பூசும் பணி முடிவடைந்தது. அடிவாரத்திலிருந்து மலை கோவில் வரை உள்ள படிக்கட்டுகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் முடிவடைந்தது.

இக்கோயிலின் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சி கடந்த 23ம் தேதி முதல் பல்வேறு பூஜைகளுடன் நடந்தன. இந்த நிலையில் நேற்று காலை 8.15 மணிக்கு சிவாச்சாரியார்கள் அனைத்து பரிவார மூர்த்திகளின் கோபுரகலசங்களுக்கும், முருகப்பெருமான் விமான கோபுர கலசத்திற்கும் தீர்த்த குடங்களில் இருந்து புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். தொடர்ந்து முருகன் வள்ளி தெய்வானை மற்றும் அனுமன், அருணாசலேஸ்வரர் சுவாமிக்கு மகா அபிசேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில்  முருகபெருமான் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளித்தார். அன்னதானம் நடைபெற்றது. பகல் 1 மணிக்கு தச தரிசனம் மகா அபிஷேகம் நடைபெற்றது.

மாலை 5 மணிக்கு முருகன் வள்ளி தெய்வயானை திருக்கல்யாண விழா நடைபெற்றது. விழா நிகழ்ச்சிகளை புலவர் சங்கரலிங்கம் சண்முகஞானசம்பந்தன், சண்முகா தேவி ஆகியோர் தொகுத்து வழங்கினர். துடியலூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம், எஸ்ஐ பொன்ராஜ் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதில் பெஸ்டன் குழும தலைவர் ஸ்ரீபிரியா கௌரிஷங்கர், உறவுகள் அறக்கட்டளை நிறுவனதலைவர் இராம.ரமணன், வள்ளியம்மன் அறக்கட்டளை நிறுவனர் அன்பு என்கின்ற செந்தில் பிரபு, மயில் மார்க் சம்பா ரவை நிறுவன பங்குதாரர் பாலு,  திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையாகவுண்டர், கே.எம் சிஎச் ஆலோசகர் தினமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: