கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு கோவை எல்லையில் தடுப்பு நடவடிக்கை இல்லை

கோவை, பிப். 26: கேரளா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தமிழக-கேரள எல்லையான வாளையாறு உள்ளிட்ட கோவை மாவட்ட எல்லை பகுதியில் எவ்வித தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்த மாநிலங்களில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  கேரளாவில் தினமும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கேரளாவில் இருந்து வருபவர்கள் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என கர்நாடகா அரசு அறிவித்து கேரளா எல்லைகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளது. இதேபோல் கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் நபர்கள் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, தேனி, கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களில் உள்ள தமிழக-கேரளா எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், கோவை மாவட்டத்தில் உள்ள வாளையார், ஆனைக்கட்டி, மீனாட்சிபுரம், வேளாந்தாவளம் உள்ளிட்ட தமிழக-கேரளா எல்லைப்பகுதிகளில் எவ்வித தடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கேரளாவில் இருந்து தினமும் ஏராளமான வாகனங்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் கோவைக்கு வந்து கொண்டிருக்கின்றன. மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையின் இந்த அலட்சியம் காரணமாக மீண்டும் கோவையில் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவையில் இருந்து கேரளாவிற்கு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இருப்பினும், வாளையார் வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல், கேரளா அரசும் வாளையார் வரை பேருந்துகளை இயக்கி வருகிறது. இதனால், கேரளாவில் இருந்து வரும் பயணிகள் வாளையாரில் இறங்கி அங்கிருந்து டவுன் பஸ் மூலம் கோவைக்குள் வருகின்றனர். இவர்களுக்கு எவ்வித பரிசோதனையும் செய்வதில்லை. சபரிமலை சீசனின்போது கேரளா அரசு தமிழகத்தில் இருந்து வரும் நபர்களுக்கு கொரோனா டெஸ்ட், இ-பாஸ் போன்ற நடைமுறையை அமல்படுத்தியது.

தற்போது, கேரளாவில் பாதிப்பு அதிகம் இருப்பதால், இது போன்ற நடைமுறையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக-கேரள எல்லையான வாளையார், ஆனைக்கட்டி உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறையினர் சிறப்பு முகாம் ஏற்படுத்தி கோவைக்குள் நுழையும் நபர்களின் பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>