வாஷிங்டன்: பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்று ஈரான் மீதான போர்நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் நீட்டித்தார். ஈரான் தரப்பிலிருந்து அமைதித் திட்டம் அளிக்கப்படும் வரை போர்நிறுத்தம் தொடரும்; பிப். 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்த நிலையில், ஏப்.8 முதல் போர்நிறுத்தம்; போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டாலும், ஹோர்முஸ் நீரிணையில் முற்றுகை தொடரும் என்று கூறினார்.
அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், “ஈரான் அரசாங்கம் எதிர்பாராத வகையில் மிகத் தீவிரமாகப் பிளவுபட்டுள்ளது என்ற உண்மையின் அடிப்படையிலும், பாகிஸ்தானின் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் ஆகியோரின் கோரிக்கையின் பேரிலும், ஈரான் தலைவர்களும் பிரதிநிதிகளும் ஒரு ஒருங்கிணைந்த முன்மொழிவை முன்வைக்கும் வரையில், அந்நாட்டின் மீதான எங்களது தாக்குதலை நிறுத்திவைக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளோம்.
எனவே, நமது ராணுவம் முற்றுகையைத் தொடரவும், மற்ற அனைத்து அம்சங்களிலும் தயார் நிலையிலும் திறனுடனும் இருக்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். அத்துடன், அவர்களின் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு, அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் எவ்வகையிலாயினும் நிறைவடையும் வரையில், நான் போர்நிறுத்தத்தை நீட்டிக்கிறேன்” என்று இவ்வாறு கூறியுள்ளார்.
