இங்கிலாந்து: டைட்டானிக் கப்பலில் பயன்படுத்தப்பட்ட பாதுகாக்கும் உடை (Life jacket) ஏலம் விடப்பட்டது. லண்டனில் நடந்த ஏலத்தில் அந்த உடை ரூ 8.2 கோடிக்கு விலை போனது. டைட்டானிக் கப்பல் விபத்தில் சிலர் மட்டுமே உயிர் பிழைத்த நிலையில் அதில் ஒருவரான லாரா மேபல் ஃபிரான்காடெல்லி அணிந்திருந்த உடை இது என கூறப்படுகிறது. டைட்டானிக் கப்பல் மூழ்கி 114 ஆண்டுகளில் ஏலத்தில் விற்கப்பட்ட ஒரே பாதுகாக்கும் உடை இதுவாகும்.
இங்கிலாந்தை சேர்ந்த சுற்றுலா கப்பலான டைட்டானிக் கடந்த 1912 ஆண்டு கடலிருந்த பனிக்கட்டி மீது மோதி மூழ்கியது. இதில் சுமார் 1500 பேர் உயிர் இழந்தனர். சுமார் 700 பேர் உயிர் பிழைத்த நிலையில் அதில் ஒருவரான முதல் வகுப்பில் பயணித்த லாரா மேபல் ஃபிரான்காடெல்லி உயிர்காப்புப் படகில் ஏறுவதற்கு முன்பு இந்த அங்கியைப் பயன்படுத்தினார்.
இதனிடையே பாதுகாக்கும் உடையை ஏலத்தில் வாங்கியிருக்கும் ஆண்ட்ரூ ஆல்ட்ரிட்ஜ், தான் “பேரானந்தம்” அடைந்ததாகக் கூறினார். மேலும் அவர், “இது டைட்டானிக் கப்பலின் கதை, அதன் பயணிகள் மற்றும் பணியாளர்கள் மீதான தொடர்ச்சியான ஆர்வத்தையும் பேரார்வத்தையும் பிரதிபலிக்கிறது” என்று கூறினார்.லாரா மேபல் ஃபிரான்காடெல்லியும் அவருடன் உயிர் பிழைத்தவர்கள் 12 பைகள், தோள்பட்டை தாங்கிகள் மற்றும் பக்கவாட்டு பட்டைகள் பொருத்தப்பட்டிருந்த சாதனத்தில் கையெழுத்திட்டிருந்தனர். மேலும் டைட்டானிக் கப்பலிலிருந்த சிறு படகின் குஷன் ரூ.5 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
