எரிபொருள் நெருக்கடியால் வங்கதேசத்தில் மொபைல் சேவை முற்றிலும் முடங்கும் அபாயம்.!!

டாக்கா: மேற்காசிய போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையால் வங்கதேசத்தில் மொபைல் போன் நெட்வொர்க் பெருமளவில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வங்கதேச நாடானது எண்ணெய் மற்றும் எரிவாயுவில் சுமார் 95% மேற்காசியாவில் இருந்தே இறக்குமதி செய்து வருகிறது. ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து இன்னும் சீராகாததால் வங்கதேச நாட்டிற்கு தேவையான பெட்ரோல், டீசல் உரிய அளவு கிடைக்கவில்லை. இதனால் அந்நாட்டின் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்த சூழலில் வங்கதேச நாட்டில் மின்வெட்டும் அதிகரித்து உள்ளதால் மொபைல் டவர்களை இயக்க தினமும் 1 லட்சம் லிட்டர் எரிபொருள் தேவைப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் எரிபொருள் பற்றாக்குறை உள்ளதால் மொபைல் அழைப்புகள் மற்றும் இணைய சேவை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. வங்கதேச நாட்டில் எரிபொருள் பற்றாக்குறையில் இதே நிலை தொடர்ந்தால் அந்த நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரம், மொபைல் மூலம் மேற்கொள்ளப்படும் பணபரிவர்த்தனைகள், இ-காமர்ஸ் சேவை உள்ளிட்ட பல முக்கிய விசஷயங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட கூடும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

வங்கதேச மொபைல் தொலைத்தொடர்பு இயக்குநர்கள் சங்கம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தரவு மையங்கள் உள்ளிட்ட செயல்பாடுகளை இயக்குவதற்குத் தேவையான எரிபொருள் இன்றி, தொலைத்தொடர்புச் செயல்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது சாத்தியமாக இருக்காது என்று குறிப்பிட்டுள்ளது. தரவு மையங்கள் அத்தியாவசிய டீசல் கையிருப்பைக் கொண்டு இயங்குவதாலும், ஹோர்முஸ் ஜலசந்தியில் இயல்பு நிலை திரும்புவதாலும் முழுமையான டிஜிட்டல் முடக்கம் ஏற்படக்கூடும் என AMTOB எச்சரித்து உள்ளது. வங்கதேச மொபைல் தொலைத்தொடர்பு இயக்குநர்கள் சங்கம் (AMTOB) வெளியிட்டுள்ள அறிவிப்பில் அரசின் உடனடித் தலையீடு இல்லாவிட்டால், தொலைத்தொடர்பு சேவைகளைத் தொடர்ந்து கொடுப்பது என்பது இயலாத காரியமாகிவிடும் என்றும் குறிப்பிட்டிருந்தது. சுமார் 17 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்த தெற்காசிய நாடு, தற்போதைய புவிசார் அரசியல் நிலையற்ற தன்மையால் அதிகம் பாதிக்கப்பட கூடிய நிலையில் உள்ளது.

வங்கதேசத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் 12 மணி நேரம் வரை நீண்ட வரிசைகள் காணப்படுவதாக அங்கிருந்து வெளியாகி வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், விநியோகப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் நடவடிக்கையாக, அந்நாட்டின் அரசு சமீபத்தில் டீசல் விலையை 15% வரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: