போர் நிறுத்த கெடு நாளையுடன் முடியும் நிலையில் அமெரிக்கா – ஈரான் இடையே நாளை 2ம் கட்ட பேச்சுவார்த்தை? பாகிஸ்தானில் ஏற்பாடு; உலக நாடுகள் எதிர்பார்ப்பு

இஸ்லாமாபாத்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்க இஸ்லாமாபாத்தில் திட்டமிடப்பட்ட இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைநடக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலை முடிவுக்கு கொண்டு வர, கடந்த 11 மற்றும் 12ம் தேதிகளில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முதல்கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், வங்கி கவர்னர் அப்துல்நாசர் ஹெம்மாட்டி உள்ளிட்ட உயர் மட்ட குழுவினர் பங்கேற்றனர்.

சுமார் 21 மணி நேரம் தொடர்ந்து நடந்த இந்த பேச்சுவார்த்தை எந்தவித உடன்பாடும் இன்றி நிறைவடைந்தது. ஈரானின் அணுசக்தி திட்டம், முடக்கப்பட்ட 600 கோடி டாலர் நிதியை விடுவிப்பது மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பு போன்ற விசயங்கள் தொடர்பான முக்கிய அம்சங்களில் இரு நாடுகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே அறிவிக்கப்பட்ட இரண்டு வார கால போர் நிறுத்தம் நாளை (ஏப். 22) முடிவுக்கு வருகிறது.

இதையொட்டி, இஸ்லாமாபாத்தில் நாளை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். ஆனால், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகே, ‘பேச்சுவார்த்தையில் பங்கேற்பது குறித்து ஈரான் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா தொடர்ந்து கடற்படை முற்றுகையை நீட்டிப்பது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயலாகும்.

அமெரிக்காவின் இந்த நம்பிக்கை துரோகம் மற்றும் வரலாற்று ரீதியான அவநம்பிக்கை காரணமாக பேச்சுவார்த்தை முடங்கியுள்ளது’ என்று தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை கடற்படை முற்றுகை தொடரும். இது ஈரானை பணிய வைக்க தேவையான ஒரு நடவடிக்கை’ என்று தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்.

இதற்கிடையில், ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனியின் மறைவுக்குப் பின், அவரது 40ம் நாள் நினைவு தினத்தில் செய்தி வெளியிட்ட ஈரானின் தற்போதைய உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி, ‘எதிரியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்த முடிவு’ பற்றி சூசகமாக குறிப்பிட்டிருந்தார். இது தூதரக ரீதியாக பேச்சுவார்த்தைக்கு பச்சைக்கொடி காட்டியதாக கருதப்பட்டாலும், தோல்வி ஏற்பட்டால் சந்திக்க வேண்டிய எதிர்ப்புகள் காரணமாக அவர் வெளிப்படையான ஆதரவை தவிர்க்கிறார்.

போர் நிறுத்தம் முடிவதற்குள் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் அரசு தற்போது தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் தலைமையிலான குழுவினர் இன்று வாஷிங்டனில் இருந்து பாகிஸ்தான் புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் நிறுத்தம் கெடு முடிவதற்குள் ஒருமித்த கருத்தை எட்டி அமைதியை நிலைநாட்ட உலக நாடுகள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றன.

Related Stories: