இஸ்லாமாபாத்: அமெரிக்கா-ஈரான் இடையேயான 2 வார கால போர் நிறுத்தம் நாளை அதிகாலையுடன் முடியும் நிலையில், இருதரப்பில் 2ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடக்க இருப்பதாக பாகிஸ்தான் தரப்பில் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி போர் தொடங்கிய நிலையில், பாகிஸ்தானின் மத்தியஸ்த முயற்சிகளால் அமெரிக்கா-ஈரான் இடையே கடந்த 8ம் தேதி 2 வார கால தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இதில், நிரந்தர போர் நிறுத்தத்திற்கான அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்காவும் ஈரானும் நடத்திய முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அணுசக்தி திட்டம், ஹார்முஸ் ஜலசந்தி மீதான கட்டுப்பாடு போன்ற விவகாரங்களில் அமெரிக்காவின் கடுமையான நிபந்தனைகளை ஈரான் ஏற்க மறுத்தது.
இதையடுத்து 2ம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்த பாகிஸ்தான் தீவிர முயற்சி மேற்கொண்டது. ஆனால், ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிட்ட அமெரிக்க கடற்படை எந்த கப்பல்களும் உள்ளே செல்லவும் வெளியேறவும் தடை விதித்தது. வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்வதற்கான முக்கிய நீர் வழிப்பாதையான பாரசீக வளைகுடாவின் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு பதிலடியாக அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் காரணமாக, ஈரான் 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்க மறுத்தது.
இந்நிலையில், 2 வார கால போர் நிறுத்தம் நாளை அதிகாலையுடன் முடிவடையும் நிலையில், அமெரிக்கா-ஈரான் தரப்பில் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக பாகிஸ்தான் தரப்பில் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் நேற்று வெளியாகின. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், தங்கள் குழுவினருடன் இன்று அதிகாலை இஸ்லாமாபாத் வருவருவதற்கான உறுதிப்படுத்தலை பாகிஸ்தான் தலைமையிலான மத்தியஸ்தர்கள் பெற்றுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். அதே சமயம், பேச்சுவார்த்தையையோ, அதன் நேரத்தையோ அமெரிக்காவோ ஈரானோ பகிரங்கமாக உறுதிப்படுத்தவில்லை.
முன்னதாக, அமெரிக்க பேச்சுவார்த்தை குழுவுக்கு தலைமை தாங்கும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப், ஜெரார்ட் குஷ்னர் ஆகியோர் பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருப்பதாக அதிபர் டிரம்ப் நேற்று காலை தெரிவித்தார். ஆனால் ஈரான் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்றே தகவல்கள் வெளியாகின.
ஈரான் பேச்சுவார்த்தை குழுவிற்கு தலைமை வகிக்கும் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது காலிபாப் தனது எக்ஸ் பதிவில், ‘‘பேச்சுவார்த்தை மேசையை சரணடையும் மேசையாக மாற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது. ஈரானை எந்த நேரத்திலும் நிர்பந்திக்க முடியாது. அச்சுறுத்தல்களின் நிழலில் பேச்சுவார்த்தைகளை நாங்கள் ஏற்க மாட்டோம்.
இனிவரும் போர்க்களத்தில் புதிய ஆயுதங்களை கொண்டு வர நாங்கள் தயாராகி வருகிறோம்’’ என குறிப்பிட்டார். இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5.30 மணியுடன் 2 வார கால போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் நிலையில், அமெரிக்கா-ஈரான் இடையே 2ம் கட்ட பேச்சுவார்த்தை மீண்டும் இஸ்லாமாபாத்தில் நடக்குமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
* ஹார்முஸ் ஜலசந்தி நிலைமை மோசமாகும்
2 வார போர் நிறுத்தத்திற்கு முன்பு வரை ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் மட்டுமே முட்டுக்கட்டையாக இருந்தது. அதிலும், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கப்பல்களை ஈரான் அனுமதித்தது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டும் ஈரான் அனுமதிக்கவில்லை.
ஆனால் தற்போது அங்கு நிலைமை மேலும் மோசமாகி உள்ளது. அமெரிக்க கடற்படையும் ஹார்முசை முற்றுகையிட்டுள்ளதால் எந்த நாட்டு கப்பலும் உள்ளே செல்லவும் வெளியேறவும் முடியாத நிலை உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து உறுதி செய்யப்படாவிட்டால், உலக பொருளாதாரத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும் என ஐரோப்பிய ஒன்றிய போக்குவரத்து ஆணையர் எச்சரித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்திற்கு தீர்வு காண்பது ஒரு நாட்டின் பிரச்னை அல்ல, ஒட்டுமொத்த உலகத்திற்கானது என கத்தார் கூறி உள்ளது.
* ஒப்பந்தம் செய்யாவிட்டால் மீண்டும் போர்: டிரம்ப்
அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அளித்த பேட்டியில், ‘‘உண்மையில் போர் நிறுத்தத்தை நீட்டிக்க நான் விரும்பவில்லை. ஈரான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். புதன்கிழமைக்குள் ஒரு ஒப்பந்தத்தை எட்ட வேண்டும். எந்தவொரு ஒப்பந்தமும் இல்லாமல் போர் நிறுத்தம் முடிவடைந்தால், மீண்டும் ஈரான் மீது குண்டுவீச தயாராக இருக்கிறேன். அவர்களுக்கு இப்போது வேறு வழியே இல்லை. அவர்களின் கடற்படை, விமானப்படையை அழித்து விட்டோம். முக்கிய தலைவர்களை வீழ்த்தி விட்டோம்’’ என்றார். இதே போல எந்தவொரு பதிலடிக்கும் தயாராக இருப்பதாக ஈரானும் தெரிவித்துள்ளது.
* ஈரான் கச்சா எண்ணெய் கடத்திய கப்பல் சிறைபிடிப்பு
ஆசியாவில் ஈரான் கச்சா எண்ணெயை கடத்தியதற்காக, ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்த எண்ணெய் கப்பலில் அமெரிக்கப் படைகள் நேற்று முன்தினம் இரவு சிறைபிடித்ததாக அமெரிக்க பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. அதன் சமூக ஊடக பதிவில், ‘‘எந்த நாட்டு கொடியும் இல்லாத எம்டி டிபானி கப்பல் இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் இந்திய பெருங்கடலில் இருந்தது. இந்த கப்பலில் அமெரிக்க படையினர் புகுந்துள்ளனர்’’ என கூறி உள்ளது.
