வாடகை ஆட்டோக்களுக்கான கட்டணம் நிர்ணயிப்பதில் இழுபறி

கோவை, பிப்.24: வாடகை ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை நிர்ணயிப்பதில் ஏற்படும் காலதாமதத்தால் பெரு நிறுவனங்களின் ஆட்டோ சேவையோடு போட்டி போட முடியாமல் ஆட்டோரிக்ஷா ஓட்டுநர்கள் வருவாய் குறைவு மற்றும் வாழ்வாதாரத்தை இழப்பை சந்திப்பதாக தெரிவிக்கின்றனர். ஆட்டோக்களில் கட்டுப்பாடின்றி கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்ததால் கடந்த 2014ம் ஆண்டு தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி 1.8 கி.மீ தொலைவுக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.25, ஒவ்வொரு கி.மீ தூரத்திற்கு ரூ.12, காத்திருப்பு கட்டணமாக ஒவ்வோரு 5 நிமிடத்திற்கும் ரூ.3.50, இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை 50 சதவீத கூடுதல் கட்டணம், ஒரு மணிநேர காத்திருப்புக்கு ரூ.42 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த கட்டண அறிவிப்பிற்கு ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஊரக, நகர, மாநகர பகுதிகளுக்கு ஒரே மாதிரியான கட்டணம் எவ்வாறு வசூலிப்பது என்றும், ஒவ்வொரு பகுதிக்குமான புவியியல் அமைப்பு மற்றும் வாடகை கிடைக்கும் அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாவட்ட வாரியாக தனித்தனி கட்டணங்கள் நிர்ணயிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்டோ தொழிற்சங்கங்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாவட்ட நிர்வாகம், ஆட்டோ தொழிற்சங்கம் மற்றும் நுகர்வோர்கள் பேச்சுவார்த்தை நடத்தி கட்டணத்தை நிர்ணயிக்க அறிவுறுத்தியது.

ஆனால் இதுவரை கட்டண நிர்ணயம் செய்யப்படவில்லை. இதற்கிடையே பெருநிறுவனங்கள் வாடகை ஆட்டோ சேவையில் இறங்கின. இந்த நிறுவனங்களின் சேவைக்கு பொதுமக்களிடம் வரவேற்பு நிலவியது. இதனால் சொந்த ஆட்டோ வைத்து ஓட்டும் தொழிலாளர்களுக்கு கடும் வருவாய் இழப்பை சந்தித்தனர். இதையடுத்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ரூ.30 அடிப்படை கட்டணம், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.15 வசூலிப்பது என முடிவு செய்தன. ஆட்டோ சங்கங்கள் சுயமாக கட்டணம் நிர்ணயிக்க போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த திட்டம் கைவிடப்பட்டது. இதுஒருபுறம் இருக்க தற்போது கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் சொந்த வாடகை ஆட்டோக்கள் மற்றும் பெருநிறுவன வாடகை ஆட்டோக்களில் அரசு நிர்ணயித்த மீட்டர் கட்டண அடிப்படையில் கட்டணம் வசூல் செய்யப்படுவதில்லை. பல ஆட்டோக்கள் மீட்டர் இல்லாமல் தான் இயங்கி வருகின்றன. அதேபோல மீட்டர் இருக்கும் வாகனங்களில் மீட்டர் கட்டணத்திற்கும் அதிகமான கட்டணமே வாடகையாக வசூல் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் ஆட்டோக்களை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதேபோல அனுமதியின்றி இயங்கும் பைக் டாக்சிகளை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமல் ஆட்டோ கட்டணத்தை மாவட்ட நிர்வாக விரைந்து நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சுகுமாரன் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் 15,000க்கும் அதிகமான ஆட்டோக்களும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்களும் இந்த தொழிலை நம்பி உள்ளனர். நியாயமான ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்க பல வருடங்களாக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறோம். தற்போது மீட்டர் கட்டணம் என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது. சொந்தமாக ஆட்டோ ஓட்டுபவர்கள் மீது அதிக கட்டண புகார் வந்தால் அதிகாரிகள்  உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால் பெருநிறுவன ஆட்டோக்கள் அவர்களாகவே  கட்டணத்தை நிர்ணயித்து ஓட்டி வருவது குறித்து நடவடிக்கை எடுப்பதில்லை. பெட்ரோல் டீசல் விலை உயர்வு, பல மடங்கு உயர்ந்த இன்சூரன்ஸ் கட்டணம், வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு போன்ற பல சிரமங்களை ஆட்டோ தொழிலாளர்கள் சந்தித்து வருகின்றனர். இதனால் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து, பெருநிறுவன ஆட்டோ சேவைகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன.

இதேநிலை நீடித்தால் சொந்தமாக ஓட்டிய நிலைமாறி பெருநிறுவனங்களுக்கு கமிஷன் வழங்கி ஓட்டவேண்டிய நிலையே ஏற்படும்.  ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுக்காக்க பொதுமக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பாதிப்பில்லாமல் நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க அரசு முன்வரவேண்டும். இவ்வாறு சுகுமாரன் கூறினார்.

Related Stories:

>