புதுடெல்லி: வேளாண் துறையில் மாநில அரசுகள் வழங்கும் ஊக்கத்தொகை தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சகம் சமீபத்தில் அனுப்பிய கடிதத்தைத் தொடர்ந்து, நெல்லுக்கான ஊக்கத்தொகையை நிறுத்த உத்தரவு பிறக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை செயலாளர் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
ஊட்டச்சத்து பாதுகாப்பு, சுயசார்பு மற்றும் நிலையான விவசாயம் ஆகிய தேசிய முன்னுரிமைகளுக்கு ஏற்ப, மாநிலங்களின் ஊக்கத்தொகைக் கொள்கைகளை பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அமைக்குமாறு செலவினத்துறைச் செயலாளர், மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு கடந்த ஜனவரி 9ம் தேதி அனுப்பிய கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார்.
இந்த கடிதம் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட ஓர் ஆலோசனையே தவிர, அது ஒரு கட்டாய உத்தரவு அல்ல. பல மாநிலங்களில், குறிப்பாக வட இந்தியாவில், சாகுபடி என்பது கோதுமை மற்றும் நெல் பயிரை நோக்கியே அதிகமாக உள்ளது. மாநில அரசுகள் இந்தப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் கூடுதல் ஊக்கத்தொகை அறிவிக்கும்போது, அது அவற்றின் சாகுபடியையே மீண்டும் மீண்டும் ஊக்குவிக்கிறது. இதனால் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்கள் பயிரிடும் பரப்பளவு குறைகிறது.
எனவே, தேச நலன் கருதி பயிர் பல்வகைப்படுத்துதலை ஊக்குவிப்பதன் மூலம் ஒன்றிய அரசு பொறுப்பான மற்றும் தொலைநோக்குப் பார்வையிலான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஒற்றைப்பயிர் சாகுபடியைத் தவிர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உள்நாட்டு உற்பத்தியை விரிவுபடுத்துவது வெறும் பொருளாதாரக் காரணங்களுக்காக மட்டுமல்ல, விவசாயிகளின் நலனுக்காகவும் அவசியமானது.
உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பது, சர்வதேசச் சூழல், வழங்கல் சங்கிலி தடைகள் மற்றும் விலையேற்ற பாதிப்புகளுக்கு உள்ளாகும் இறக்குமதியைக் குறைக்க உதவும். அதேசமயம், இது ஊட்டச்சத்து பாதுகாப்பை வலுப்படுத்தி, நாட்டில் சமநிலையான மற்றும் தாங்குசக்தி மிக்க பயிர் அமைப்பை மேம்படுத்தவும் துணைபுரியும்.
இத்தகைய இலக்குகளுடன் இணைந்து செயல்படுவது மாநிலங்களுக்கு ஒரு சுமை அல்ல. அது விவசாயிகள், நுகர்வோர் மற்றும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் நன்மை பயக்கும் ஒரு கூட்டுப் பொறுப்பாகும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் எக்ஸ் பதிவில் பதிலளித்துள்ளார்.
