புதுடெல்லி: நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் கொண்டு வரப்படும் மகளிர் இடஒதுக்கீடு சட்ட திருத்த மசோதாவுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென மக்களவை, மாநிலங்களவை கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி வலியுறுத்தி உள்ளார். மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டப்பிரிவு, 2023ம் ஆண்டில் அரசியலமைப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் கொண்டு வரப்பட்டது. ஆனால், 2027ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மேற்கொள்ளப்படும் தொகுதி மறுவரையறை பணிகள் முடிந்த பின்னரே இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும்.
இதன்படி பார்த்தால் 2034ம் ஆண்டுக்கு முன்பாக இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது. எனவே, 2029ம் ஆண்டு மக்களவை தேர்தலிலேயே பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை கொண்டு வரும் வகையில் நாரி சக்தி வந்தன் அதினியம் (பெண்கள் சக்தியை வணங்குதல்) சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள வரும் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவை கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
எந்தவொரு சமூகமும் முன்னேற வேண்டுமெனில், அச்சமூகத்தை சேர்ந்த பெண்கள் முன்னேறுவதற்கும், முடிவுகளை எடுப்பதற்கும், தலைமை தாங்குவதற்கும் உரிய வாய்ப்புகள் கிடைப்பது இன்றியமையாதது. இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்கும் தனது தொலைநோக்குக் கனவை நனவாக்குவதற்கு, இம்முன்னேற்றப் பயணத்தில் பெண்கள் இன்னும் பரந்த அளவிலும், மிகவும் தீவிரமாகவும் பங்காற்றுவது மிகவும் அவசியம்.
எனவே, நாரி சக்தி வந்தன் அதினியம் சட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்ற முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம். 2029ம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களும், சட்டப்பேரவைத் தேர்தல்களும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுடன் நடத்தப்படுவது அவசியம். இந்த சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்காக நாம் அனைவரும் ஒரே குரலில் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இந்தச் சிறப்புக் கூட்டத்தொடர், நமது ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான பொன்னான வாய்ப்பு.
இது நாட்டின் பெண்கள் சக்திக்கும், 140 கோடி இந்தியர்களுக்கும் மாபெரும் சாதனையாக அமையும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, நாடாளுமன்றத்தில் இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்துவோம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதில் பங்காற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த வரலாற்று முயற்சியின் ஒரு பகுதியாக இருந்ததற்காக எப்போதும் பெருமை கொள்வார்கள்.
எனவே, இந்த வாய்ப்பை நாம் நழுவவிடக் கூடாது. இவ்வாறு அவர் கூறி உள்ளார். இந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டால், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 816 ஆக உயரும். அதில் 273 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
* பாஜ கொறடா உத்தரவு
வரும் 16ம் தேதி தொடங்கும் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடரில் அனைத்து பாஜ எம்பிக்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அக்கட்சியின் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாஜ எம்பிக்களுக்கு அனுப்பப்பட்ட செய்தியில், ‘சிறப்பு கூட்டத்தொடர் நடக்கும் 3 நாட்களிலும், அனைத்து ஒன்றிய அமைச்சர்களும், எம்பிக்களும் அவையில் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். யாருக்கும் விடுப்பு அளிக்கப்படாது. உறுப்பினர்கள் இந்தக் கொறடா உத்தரவை கண்டிப்பாகப் பின்பற்றி, அவையில் தங்கள் தொடர் இருப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என கூறப்பட்டுள்ளது.
* கார்கே அவசர கடிதம்
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில், ‘‘எங்களை கலந்தாலோசிக்காமல் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டுள்ளது. மகளிர் இடஒதுக்கீடு சட்டத்துடன் தொடர்புடைய தொகுதி மறுவரையறை குறித்த எந்த விவரங்களையும் வெளியிடாமல் ஒன்றிய அரசு எங்கள் ஒத்துழைப்பை கோருகிறது.
எந்த விவரமும் இல்லாமல் பயனுள்ள விவாதம் நடத்துவது சாத்தியமில்லாதது. 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் நிலையில் நாடாளுமன்றத்தை கூட்டுவது, மகளிர் இடஒதுக்கீடு சட்ட திருத்தத்தை இயற்றுவது அரசியல் ஆதாயத்திற்காக என நம்பப்படுகிறது. எனவே ஏப்ரல் 29க்குப் பிறகு தேர்தல் முடிந்த பிறகு மகளிர் இடஒதுக்கீடு சட்டம் தொடர்பாக விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்’’ என கோரியுள்ளார்.
இதற்கு பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் ஷெசாத் பொன்னல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதை காங்கிரஸ் தடுக்க முயற்சிப்பதாகவும் சீர்திருத்தத்தை அக்கட்சி விரும்பவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டி உள்ளார். இதே போல தேர்தல் சமயத்தில் இத்தகைய செயல்பாடுகளை செய்து பிரதமர் மோடியும், அமித்ஷாவும் நாடாளுமன்றத்தை கேலிக்கூத்தாக்குவதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன் குற்றம்சாட்டி உள்ளார்.
