திரைப்பட படப்பிடிப்பில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு முதுகில் தீக்காயம்

மும்பை: பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி படப்பிடிப்பின் போது ஏற்பட்ட தீக்காயத்தையும் பொருட்படுத்தாமல் மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். திரைத்துறையில் வெற்றிகரமாக பயணிக்கும் சீனியர் நடிகர்கள், நடிகைகள் பல சவால்களைக் கடந்து தங்களது பணிகளைத் தொடர்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது நடிகை ஷில்பா ஷெட்டியும் இணைந்துள்ளார். மும்பையில் தற்போது நடைபெற்று வரும் ஒரு திரைப்படத்தின் விறுவிறுப்பான சண்டைக் காட்சியின் போது, நடிகை ஷில்பா ஷெட்டியின் (49) முதுகில் எதிர்பாராதவிதமாக தீக்காயம் ஏற்பட்டது.

இந்த விபத்தால் படப்பிடிப்பு தளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வலியால் துடித்த அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இருப்பினும், தனது காயத்தால் தயாரிப்பு செலவுகள் வீணாவதை விரும்பாத ஷில்பா ஷெட்டி, வெறும் 24 மணி நேரத்திற்குள் மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்குத் திரும்பினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘வேலை மீதான ஈடுபாடும் கடமை உணர்வுமே என்னை மீண்டும் படப்பிடிப்புக்கு வரவழைத்தது. காயம் ஏற்பட்டாலும் பணிகளைத் தள்ளிப்போட விரும்பவில்லை’ என்று தெரிவித்தார்.

லொகேஷன் வாடகை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் ஊதியம் எனப் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்கவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. தற்போதைய நிலையில் அவர் காயத்திலிருந்து மீண்டு நலமுடன் இருப்பதாகவும், தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: