காரில் கிடந்த 35 பவுன் தங்க நகை

கோவை, பிப்.21: கோவை கோல்டு வின்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஆதம் (80). மார்பு வலியால் பாதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று தனது மனைவி, மகள், பேரன் ஆகியோருடன் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கால் டாக்சியில் வந்தார். காரில் ஆதம் குடும்பத்தினர் துணி பேக் மற்றும் பல்வேறு பொருட்களை வைத்திருந்தனர். காரை ஆவாரம்பாளையம் ரோட்டை சேர்ந்த பாபி (46) என்பவர் ஓட்டி வந்தார். மருத்துவமனை முன் காரில் இறங்கிய இவர்கள் பேக்குகளை எடுத்து கொண்டு இறங்கினர். சில நிமிட நேரம் கடந்து, பாபியின் செல்போன் எண்ணிற்கு அழைப்பு வந்தது. அப்போது பேசியவர், ‘‘என் பெயர் ஆதம், நானும் என் குடும்பத்தினரும் உங்கள் காரில்தான் மருத்துவமனைக்கு வந்தோம். அதில் ஒரு பேக் இருக்கிறது. நாங்கள் எடுக்க மறந்து விட்டோம். எங்களிடம் வந்து ஒப்படைக்கவும்’’ என கேட்டார். அதற்கு பாபி உங்கள் பேக் கலர் என்ன என கேட்டார். அவரால் என்ன கலர் என சொல்லமுடியவில்லை. பாபி பேக்கை திறந்து பார்த்தபோது அதில் தங்க நகைகள் இருந்தது.

சந்தேகமடைந்த பாபி, உங்கள் முகத்தை நான் சரியாக பார்க்கவில்லை. எனக்கு குழப்பமாக இருக்கிறது எனக்கூறி நகைகளை ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் சுஜாதாவிடம் ஒப்படைத்தார். மேலும் நகையை கேட்ட நபரிடம், போலீஸ் ஸ்டேஷனில் நகைகள் இருக்கிறது. உரிய ஆதாரங்களை சொல்லி பெற்று கொள்ளுங்கள் என பாபி கூறி விட்டார். இதைத்தொடர்ந்து போலீஸ் ஸ்ேடஷன் சென்ற ஆதம் உரிய ஆதாரங்களை காட்டி நகைகளை பெற்று கொண்டார்.

ஆதம் போலீசாரிடம், ‘‘நகை, பணத்துடன் காரில் வந்தோம். நகைகளை என் மனைவி எடுத்து வந்ததை நான் கவனிக்கவில்லை. நகை பேக்கை எடுத்து விட்டோம் என நினைத்து வாடகை கொடுத்து காரை அனுப்பி விட்டோம். அப்போதுதான் பேக் எடுக்காமல் இருப்பது தெரியவந்தது. கார் டிரைவரும் எங்கள் முகத்தை சரியாக பார்க்கவில்லை. உங்களின் அடையாளம் தெரியவில்லை எனக்கூறி விட்டார்’’ என தெரிவித்தார்.

Related Stories: