ஹவாலா பணத்துடன் கார் கடத்தல் வழக்கில் லாரி டிரைவர் கைது

கோவை, பிப்.21: கேரளா மாநிலம் பாலக்காடு நாட்டுக்கல்லை சேர்ந்தவர் முகமது முஸ்தபா (34). இவர் நண்பர் சாஜா உசேன் (35). கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி முகமது முஸ்தபா தனது நண்பரின் சொகுசு காரை வாங்கிக்கொண்டு சாஜா உசேனுடன் கேரளாவில் இருந்து கோவைக்கு வந்தார். ஒப்பணக்கார வீதியில் அட்டைப்பெட்டி ஒன்றை வாங்கிக் கொண்டு மீண்டும் அன்றைய தினம்  இரவு  கேரளா மாநிலம் மன்னார்காடு நோக்கிச் சென்று கொண்டிருந்தார். கார் மதுக்கரை மரப்பாலம் சென்றபோது திடீரென முன்னால் சென்ற லாரி குறுக்கே திரும்பி நின்றது. அவ்வழியாக வந்த காரில் இருந்து 4 பேர் இறங்கினர். இவர்கள் முகமது முஸ்தபா வந்த காரை மறித்து கண்ணாடியை உடைத்தனர். இருவரையும் தாக்கி காரை பறித்து தப்பி சென்றனர். மதுக்கரை போலீசில் முகமது முஸ்தபா புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் பதிவு எண் குறித்த தகவல்களை மற்ற போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். மதுக்கரையில் மாயமான கார் கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளையில் மீட்கப்பட்டது. இந்த கார் மதுக்கரை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த முகமது அப்சல் (28) என்ற லாரி டிரைவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள 4 பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். காரில் ஹவாலா பணம் இருந்திருக்கலாம். இந்த பணத்தை கொள்ளையடிக்க லாரி டிரைவரை பயன்படுத்தியிருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: