செங்கம், ஏப்.12: செங்கம் தொகுதியில் ஆவணங்கள் இல்லாமல் காரில் கொண்டு வந்த ரூ.1.36 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். செங்கம் சட்டமன்ற தொகுதியில், நிலை கண்காணிப்பு குழுவினர் செங்கம் அன்வராபாத் ரோடு பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக காரில் கொண்டு வந்த ரூ.1.36 லட்சம் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றி வாகனத்தில் வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அவர் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், வாடமங்களம் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி என்பதும், பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், செங்கம் தேர்தல் அலுவலர் இளவரசனிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து பெறப்பட்ட பணம் அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது. அப்போது, துணை தேர்தல் அலுவலர் முருகன், துணை வட்டாட்சியர்கள் திருநாவுக்கரசு, வாலீஸ்வரன் உடன் இருந்தனர்.
