ஆரணி, ஏப்.9: ஆரணி அருகே நள்ளிரவு நடந்த சோதனையில் பாமக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரிடம் ரூ.2 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுவினர்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆரணி- தேவிகாபுரம் செல்லும் சாலையில், சீனிவாசபுரம் கூட்ரோட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் பாபு தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆரணியில் இருந்து தச்சூர் நோக்கி பைக்கில் வந்த ஒருவரை மடக்கி சோதனை செய்தனர். இதில் அவர் ரூ.2 லட்சம் ரொக்க பணம் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர், ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தை சேர்ந்த பாமகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வடிவேல் என்பது தெரியவந்தது. மேலும், உரிய ஆவணம் இல்லாததால் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் ரூ.2 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்து, ஆரணி தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தார் குமரேசனிடம் ஒப்படைத்தனர்.
