செய்யாறு, ஏப்.11: குடும்ப தகராறு காரணமாக ஐஸ் வியாபாரியை தாக்கி மிரட்டல் விடுத்த மைத்துனரை போலீசார் கைது செய்தனர். செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா குத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர்(40), ஐஸ் வியாபாரி. இவரது மனைவி ஷீலா. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். ஜெய்சங்கர் சம்பாதிக்கும் பணத்தை, ஷீலா தனது கணவருக்கு தெரியாமல் அதே கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு கொடுத்து வருகிறாராம். இதனையறிந்த ெஜய்சங்கர் தட்டிக்கேட்டார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த 6ம்தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஷீலா கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதையறிந்த ஷீலாவின் சகோதரர் வெங்கடேசன்(33), தந்தை முனுசாமி(55) ஆகியோர், நேற்று முன்தினம் ஜெய்சங்கர் வீட்டிற்கு ெசன்றார். அப்போது தகராறு செய்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் ‘என் அக்காவிடம் தகராறு செய்தால், கத்தியால் குத்தி கொன்றுவிடுவேன்’ என வெங்கடேசன் கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் படுகாயம் அடைந்த ஜெய்சங்கர், செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது ெசய்தார். தலைமறைவான முனுசாமியை தேடி வருகிறார்.
