முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் தமிழ்நாடு வளம் பெற்றுள்ளது; விவசாயிகள் நலனை திமுக எப்போதும் பாதுகாக்கும்: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

திருவண்ணாமலை, ஏப்.8: முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றும் திட்டங்களால் தமிழ்நாடு வளமும், வளர்ச்சியும் பெற்றுள்ளது என அமைச்சர் எ.வ.வேலு பேசினார். திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் எ.வ.வேலு தொகுதி முழுவதும் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் சாதனைகளையும் திருவண்ணாமலை தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களையும் நினைவு கூர்ந்து பொதுமக்கள் நெகிழ்ச்சியோடு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டாம்பூண்டி தச்சம்பட்டு உள்ளிட்ட கிராமங்களிலும், திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளிலும் அமைச்சர் எ.வ.வேலு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பெண்கள் வெற்றி திலகமிட்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: திராவிட மாடல் ஆட்சி நாயகர் மு.க.ஸ்டாலின் ஆசியோடு மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடுகிறேன். ஒரு காலத்தில் நமது விவசாய பெருங்குடி மக்கள் விவசாய நிலத்திற்கான மின்கட்டணம் கட்டுவதற்கு மிகவும் சிரமப்பட்டார்கள். அதிமுக ஆட்சியில் கடுமையான முறையில் மின்கட்டணம் வசூலிக்கப்பட்டது. 1989ம் ஆண்டு கலைஞர் பொறுப்பேற்றவுடன் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கினார்.

தற்போது தமிழ்நாட்டு விவசாயிகள் வேளாண்மை உற்பத்தியில் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் குழாய் பாசனத்தை பெரிதும் நம்பியே உள்ளனர். எனவே இலவச மின்சாரம் பெறும் சுமார் 20 லட்சம் விவசாயிகள் பாசன தேவைக்கேற்ப, எவ்வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சார பம்புசெட்டுகள் வழங்கப்படும் என முதல்வர் வாக்குறுதி அளித்திருக்கிறார்.

மேலும், நெல்கொள்முதல் விலை குவிண்டால் ஒன்று ரூ.3500ஆக வழங்கப்படும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4500ஆக உயர்த்தி வழங்கப்படும். மேலும் பால் கொள்முதல் ரூ.5ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். எப்போதும் திமுக விவசாயிகளின் பாதுகாப்பு அரணாக திகழும். எனவே முதல்வர் அளித்துள்ள வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது.

கலைஞர் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் ஊக்கத்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தப்படும். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக உயரம் நிலை உருவாகியுள்ளது. இல்லதரசி திட்டத்தில் ரூ.8 ஆயிரம் கூப்பனை நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுக்க இருக்கிறார். அதன் மூலம் தாய்மார்கள் தங்களுக்கு தேவையான குளிர்சாதனப் பெட்டியோ, சலவை இயந்திரமோ வாங்கிக் கொள்ளலாம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்வதை தான் செய்வார், செய்வதைத்தான் சொல்வார். ஆனால் நிர்வாகத் திறமை இல்லாத எடப்பாடி பழனிச்சாமி தேர்தலுக்காக சொல்லும் வாக்குறுதிகளை மக்கள் நம்ப தயாராக இல்லை. தமிழர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் டெல்லியை வீழ்த்துவோம், தமிழ்நாடு வெல்லட்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது தலைமை செயற்கு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மாநகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மாவட்ட பொருளாளர் பன்னீர் செல்வம், துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், மாவட்ட அவைத் தலைவர் கோ.கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் மெய்யூர் சந்திரன், த.ரமணன், மற்றும் காங்கிரஸ் தேமுதிக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 

Related Stories: