ஒரு இயந்திரத்தில் வாக்குப்பதிவு அலுவலர்கள் நிம்மதி வந்தவாசி தொகுதியில் 15 பேர் போட்டி

வந்தவாசி, ஏப்.10: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வந்தவாசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட 21 நபர்கள் 31 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதில் 15 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து எஸ்.அம்பேத்குமார்(திமுக), ராணி பெருமாள்(அதிமுக), உதயகுமார் (தவெக), கணேஷ் (நாதக), முத்து பெருமாள்(அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம்), தாமரைச்செல்வி (தவாக), முத்துச்செல்வன்(ஊழல் ஒழிப்பு செயலாக்கம் கட்சி), ராகேஷ் ஷர்மா(தாக்கம்), சுயேட்சைகள் தி.அம்பேத்கர், அர்ஜுனன், உதயகுமார், கன்னியப்பன், சஞ்சய், பொன்னம்பலம், ராணி, ஜெய்சங்கர் ஆகியோரது மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நேற்று சஞ்சய் திமுக மாற்று வேட்புமனுவை வாபஸ் பெற்றதை தொடர்ந்து 15 பேர் களத்தில் உள்ளனர். ஒரு வாக்கு பதிவு இயந்திரத்தில் நோட்டா மற்றும் 15 வேட்பாளர்கள் மட்டுமே சின்னம் பொறுத்தும் வகையில் இருப்பதால் 15 க்கும் மேற்பட்ட வேட்பாளர் இருந்தால் கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரம் இணைக்க வேண்டும். இதனால் வாக்கு பதிவு அலுவலர்களுக்கு கூடுதல் வேலை ஏற்படுவதுடன் நடைமுறை சிக்கலும் ஏற்படும். 15 வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளதால் ஒரு இயந்திரம் மட்டுமே பொறுத்த வேண்டி இருப்பதால் அலுவலர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Stories: